சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமகையில் அனுமதிகக்ப்பட்ட நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்று தகவல் வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு எவ்வித பணிகளிலும் ஈடுபடமாமல் விட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதனிடையே திடீர் இருமல் மற்றும் சளி காரணமாக கடந்த 18 தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரமாக அங்கு சிகிச்சையில் இருக்கும் விஜயகாந்தின் உடல் நிலை சீராக இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவருக்கு நுரையீரல் சிகிச்சை தேவைப்படுவதால் மேற்கொண்டு 14 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் உடல் நிலை குறித்து வதந்திகள் பரவ தொடங்கிய நிலையில், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் இது குறித்து விளக்கம் அளித்திருந்தார். விஜயகாந்த் முழு உடல்தகுதியுடன் விரைவில் வீடு திரும்புவார் எனறும் அவர் தனது வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே விஜயகாந்தின் உடல் நிலை தனக்கு கவலை அளிப்பதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் உடல்நிலை குறித்து கேள்விப்பட்டு மிகுந்த கவலை அடைந்தேன். அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுடன் இணைந்து அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான காலத்தை கடக்கும் விஜயகாந்த் குடும்பத்தினருக்கு எனது அன்பும் ஆதரவும் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“