ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுதுகொண்டிருக்கிறேன் - தமிழிசை உருக்கம்
காங்கிரஸ் எம்.பி மரணத்துக்கு அவரது அண்ணன் மகளும் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுதுகொண்டிருக்கிறேன் என்று உருக்கமாக துயரத்தை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மரணத்துக்கு அவரது அண்ணன் மகளும் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுதுகொண்டிருக்கிறேன் என்று உருக்கமாக துயரத்தை தெரிவித்துள்ளார்.
Advertisment
கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். இவர் வசந்த் & கோ நிறுவனத்தின் உரிமையாளர். காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனனின் உடன்பிறந்த சகோதரர். இவருடைய மறைவு காங்கிரஸ் கட்சியினரை மட்டுமல்லாமல் தமிழக மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
வசந்தகுமாரின் அண்ணன் குமரி அனந்தனின் மகளும் தெலங்கானா மாநில முதல்வருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது சித்தப்பா வசந்தகுமார் எம்.பி மறைவு குறித்து, “சித்தப்பா, ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுதுகொண்டிருக்கிறேன்” என்று உருக்கமாக தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 28, 2020
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சித்தப்பா: நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது. என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்.
அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது. ஆனால், வேறு வேறு பாதையில் பயணித்தோம்...
இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர இரத்தப் பாசம் இருவரிடமும் உண்டு.
தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும் துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்.
சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது. சண்டையிட்டது. எல்லாம் நினைவிற்கு வருகிறது..
வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பல பேருக்கு பணி கொடுத்த தருமம்கூட காப்பாற்றவில்லை என்று மனம் பதைபதைக்கிறது..
கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும்..
கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது..
ஆளுநராக இருந்தாலும்
அண்ணன் மகளாக அழுதுகொண்டிருக்கிறேன்..” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"