நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் தன சிங் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக நெல்லை எஸ்.பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூரைச் சேர்ந்த கே.பி.கே ஜெயக்குமார். இவர் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூசுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். இந்த நிலையில், ஜெயக்குமாரை 2 நாட்களாக காணவில்லை என அவரது மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
தனது தந்தை கடந்த 2-ம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். முன்னதாக, கடந்த 30-ம் தேதி ஜெயக்குமார் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறி கடிதம் அனுப்பி உள்ளார்.
கருத்தையாவின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று (மே 4) கரைசுத்து புதூர் அருகே உள்ள தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 3 தனிப்படைகள் அமைக்கப்படும் என நெல்லை எஸ்.பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“