நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில் கட்சித் தலைவர் விஜய் கட்சியின் கொள்கை, எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தொடர்ந்து பா.ஜ.க, தி.மு.க கட்சிகளை விமர்சனம் செய்தார். விஜய்யின் பேச்சுக்கு வரவேற்பும், பதில் விமர்சனமும் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விஜயை விமர்சனம் செய்துள்ளனர். அவர் பேசுகையில், "நடிகர் விஜய் புதிய கட்சியைத் தொடங்கி இருக்கிறார். அவருக்கு என்னுடைய நல் வாழ்த்துகள்.
புதிய கட்சியின் ஒரு கோட்பாடாக, ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று சொல்லி இருக்கிறார். அந்த கட்சி வரும் நாட்களில் தன்னுடைய கொள்கைகளை எல்லாம் சொல்லும் என நினைக்கிறேன். ஆனால் அவர், காங்கிரஸ் கட்சியின் சில கொள்கைகளை வலியுறுத்தி, பின்பற்றிப் பேசி இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. சில வாசகங்கள் மகிழ்ச்சியைத் தரவில்லை.
எதுவாக இருந்தாலும் விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார். அவருக்கு என்னுடைய நல் வாழ்த்துகள். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது தமிழகத்தில் சாத்தியமா? என்பதை விஜய்யைத்தான் கேட்க வேண்டும். இது சாத்தியமா? சாத்தியம் இல்லையா? என்பதை தேர்தல்தான் முடிவு செய்ய வேண்டும். அதை இப்பவே எப்படி சொல்ல முடியும்?
அவங்க பாசிசம்னா நீங்க பாயாசமா? என பேசுவது எல்லாம் சினிமா வசனங்கள் மாதிரி உள்ளது. சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக்கிடாதீங்க" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“