காங்கிரஸ் தலைவர்களையும் தொடர்ந்து அவதூறாக விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, திமுக அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. சீமானைதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி ஜோதிமணி இன்று டிஜிபியை சந்தித்து புகார் அளித்தனர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை புகழ்ந்தும் தாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள் என்று கூறி பேசி வருகின்றனர்.
அதோடு, காங்கிரஸ் கட்சியினரையும் காங்கிரஸ் தலைவர்களையும் அவதூறாக பேசி விமர்சித்து வருகிறார்கள். இதனால், காங்கிரஸ் கட்சியினர் கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
அண்மையில், இங்கே இருக்கும் காங்கிரஸ்காரர்கள் ராஜீவ் காந்தி பிள்ளைகள் போல பேசுகிறார்கள். சக்களத்தி சோனியா பிள்ளைகள் போல பேசுகிறார்கள் என்று அவதூறாக பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சீமானின் இந்த பேச்சு காங்கிரஸ்காரர்களை கொதிப்படையச் செய்தது.
இதையடுத்து, கடந்த வாரம் காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா ஆகியோர் டிஜிபியை சந்தித்து சீமானை கைது செய்யக் கோரி புகார் அளித்தனர். சீமான் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சியில் ஆலோசித்து அடுத்த கட்டமாக போராட்டத்தை முன்னெடுப்போம் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசும் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சீமானை கைது செய்ய வேண்டும் என டிஜிபியிடம் புகார் அளித்த கே.எஸ்.அழகிரி அப்போது பேசியதாவது: “நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலங்களாக காங்கிரஸ் கட்சியை ஏற்கத்தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகிறார். விமர்சிக்க கூடாது எனக் கூறவில்லை. அதற்குரிய வார்த்தை வரம்புகள் இருக்கின்றன. சீமானின் கொள்கைகள் எடுபடாத நிலையில், இதுபோன்ற விமர்சனங்களை செய்து வருகிறார்.
அரசியல் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் அவர் வன்முறையை தூண்டும் விதமாக பேசுவதன் மூலம் விளம்பரம் தேடிக் கொள்கிறார். டிஜிபி சைலேந்திரபாபுவிடம் இது குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எங்களுடைய புகார் மீது 7 நாட்களில் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது முழுக்க முழுக்க கட்சி சார்ந்த புகாரே தவிர தனிப்பட்ட புகார் இல்லை என்று கூறினார்.
இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிர்வாகி யூடியூபர் சாட்டை துரைமுருகன், சீமான் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக எச்சரித்தார்.
திமுகவைப் பற்றி பேசிய சாட்டை துரைமுருகன், “நீங்கள் கருணாநிதி, அண்ணாதுரையிடம் படித்து வளர்ந்தவர்கள். நாங்கள் தலைவர் பிரபாகரனை படித்து வளர்ந்த பிள்ளைகள். பெரியார், கருணாநிதி பிள்ளைகளுக்கு பேச தெரியும், எழுத தெரியும். பிரபாகரன் பிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்று காங்கிரஸ்காரர்களுக்கு தெரியும். ராகுல் காந்திக்கு தெரியும். சோனியா காந்திக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமில்ல. உங்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் ஞாபகம் இருக்குமில்ல. அவ்வளவு தான்.” கடுமையாக எச்சரித்து பேசினார். சாட்டை துரைமுருகனின் பேச்சு கொலை மிரட்டல் என்று குற்றம் சாட்டும் காங்கிரஸ்காரர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, முதல்வர் ஸ்டாலினுக்கு ட்விட்டரில் சாட்டை முருகனின் வீடியோவை டேக் செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். நாம் தமிழர் கட்சியின் இந்த பேச்சு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் வரக்கூடிய குற்றம். தமிழகத்தின் அமைதியும்,அப்பாவி இளைஞர்களின் எதிர்காலமும் நாசமாகிவிடும். தமிழ்நாட்டின் அமைதியான எதிர்காலத்தில் ஒருதுளிகூட சமரசம் செய்துகொள்ளக்கூடாது.
சீமான் இந்த மேடையில் இருந்திருக்கிறார். அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே இந்த பயங்கரவாத பேச்சு நடந்திருக்க முடியும். ஆகவே சீமானையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
இதற்குமுன்பு இதே சட்டத்தின்கீழ் இப்படி கைது நடந்திருக்கிறது என்று ஜோதிமணி தனது பதிவில் கூறியுள்ளார்.
இதனிடையே சாட்டைதுரைமுருகன் அக்டோபர் 11ம் தேதி கைது செய்யப்பட்டார். சீமானையும் கண்டிப்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்படுவாரா என்று பரபரப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து காங்கிரஸ் தலைவர்களையும் காங்கிரஸ் கட்சியையும் அவதூறாக விமர்சிக்கும் சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்(UAPA) கீழ் கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்தனர். இவ்வாறு சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.