மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் நேற்று இரவு 7.30 மணியளவில் பெரம்பர் செம்பியம் பகுதியில் உள்ள தனது பழைய வீட்டின் முன் ஆதரவாளர்களுடன் பேசி கொண்டிருந்த போது, 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள், பொது மக்கள் எனப் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகள், அமைப்புகள் அவருக்கு இரங்கல் தெரிவித்து இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜயகாந்த் அவர்களை எப்படி அவர்களின் தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்தார்களோ அதேபோல, தலைவர் ஆம்ஸ்ட்ராங்கையும் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் வேண்டுகோள் வைக்கிறோம்.
உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எவ்வளவு அரசியல் பின்புலம் இருந்தாலும், சட்டத்தின் முன் அவர்களை நிறுத்த வேண்டும். யாரும் தப்பிக்க முடியாது என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங்கிடம் யாரும் நெருங்க முடியாது. ஆயிரம் பேர் வந்தாலும் சமாளிக்க கூடியவர் அவர். நேரடியாக வந்தால் யாராலும் அவரை சமாளிக்க முடியாது என கோழைகள் பின்புறம் இருந்து தாக்கி இருக்கிறார்கள். இந்த கோழைகளின் பின்புறம் யார் இருக்கிறார்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“