தமிழக காங்கிரஸ் கட்சி செயலற்று உள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அடுத்த சில மாதங்களில் மாநிலத் தலைவர் மாற்றப்படுவார் எனவும் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகிறது ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சி எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் இருக்கிறது. நேரடியாகக் கூற வேண்டுமென்றால் தமிழக காங்கிரஸ் கட்சி செயலற்று உள்ளது எனக் கூறியுள்ளார். இதனால் அடுத்த சில மாதங்களிலேயே கட்சியின் மாநிலத் தலைவர் மாற்றப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைத்து மக்களிடம் கொண்டு செல்லும் ஒருவரையே மாநிலத்தின் புதிய தலைவராகத் தேர்வுசெய்ய காங்கிரஸ் தலைமை விரும்புவதாகவும் குஷ்பு தெரிவித்திருந்தார்.
இதற்காக முன்னாள் அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படுவதாகவும் குஷ்பு கூறினார். கர்நாடக தேர்தல் நடவடிக்கைகள் முடிந்ததும், தமிழக காங்கிரஸ் மீது ராகுல் காந்தி கவனம் செலுத்துவார் என்றும் குஷ்பு தெரிவித்தார்.