“நம்மை நம்பி வரும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு அளித்து அதிகாரத்திலும் பகிர்வு அளிக்கப்படும்” என்று நடிகர் விஜய் பேசியது காங்கிரஸில் நெருப்பை மூட்டியுள்ளது. விஜய்யின் பேச்சு, தனக்கு பிடித்திருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பதிவிட்ட நிலையில், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் இரா சரவணன் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், “நம்மை நம்பி, நம் செயல்பாட்டை நம்பி நம்மளோடு சிலர் வரலாம் இல்லையா, அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா, அப்படி வருபவர்களையும் நாம் அன்போடு அரவணைக்க வேண்டும் இல்லையா, நமக்கு எப்போதுமே நம்மை நம்பி வருபவர்களை அரவணைத்து தானே பழக்கம். அதனால், நம்மை நம்பி, நம்மோடு இணைந்து களம் காண வருபவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும்” என்று விஜய் தங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று பேசினார்.
விஜய்யின் இந்த பேச்சுக்கு, வி.சி.க-வின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் வரவேற்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, விஜய்யின் பேச்சுக்கு காங்கிரஸிலும் ஆதரவு குரல் எழுந்துள்ளது. ஆட்சியில் பங்கு அளித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்ற விஜய்யின் பேச்சு காங்கிரஸில் நெருப்பை மூட்டியுள்ளது. விஜய்யின் பேச்சை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிடியின் மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் இரா. சரவணன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “தமிழக முதல்வரும் இந்தியா கூட்டனி கட்சி தமிழக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வணக்கம். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற அவர்களது கட்சி மாநாட்டில், 2026இல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று பேசியுள்ளார். ஆகவே, தாங்கள் தற்பொழுதே நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும். தங்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள். எனவே, தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே, தமிழக மக்களின் எண்ணத்தை தாங்கள் நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன், ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் தி.மு.க - காங்கிரஸ் கட்சி இடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கடிதம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தன்னிடம் விளக்கம் கேட்காது என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.