ஜனவரி 4ம் தேதி, ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தற்போது ஆட்சியில் உள்ள நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கே இந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கியுள்ளது.
மேலும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதல்வர் ஸ்டாலினை சென்னை அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இளங்கோவன், “அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளோம். கமலை சந்தித்து ஆதரவு கேட்க நேரம் கேட்டுள்ளோம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு கட்டாயம் வரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொண்டோம். முதலமைச்சர் மீது தமிழ்நாடு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர், அது எங்களுக்கு வெற்றியை தேடித் தரும்", என்று கூறினார்.
இதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் இருக்கவேண்டும் என்று கமலிடம் கேட்கவுள்ளோம் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல் அளித்துள்ளர். ஏற்கனவே ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கமல் பங்கேற்றிருந்ததாள், காங்கிரஸ் ஆதரவு கோருகிறது என்று கூறியுள்ளார்.