கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது. இந்த விமானத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. வேணுகோபால் உட்படப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணித்தனர்.
இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட விமானம் AI2455, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்படியும் வழியில் இருந்த மோசமான வானிலை காரணமாகவும் முன்னெச்சரிக்கையாக சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது. விமானம் பாதுகாப்பாகச் சென்னையில் தரையிறங்கியது" என்றார்.
விமானத்தில் பயணித்த கே.சி. வேணுகோபால், தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில், "இந்த விமானப் பயணம் விபத்திற்கு மிக அருகில் சென்றது" என்று பதிவிட்டுள்ளார். சற்று தாமதமாகப் புறப்பட்ட பயணம், பயங்கரமான பயணமாக மாறியது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிர்பாராத விதமான கடுமையான காற்றழுத்த சரிவில் சிக்கினோம். சுமார் 1 மணி நேரம் கழித்து, விமானி சிக்னலில் கோளாறு இருப்பதாக விமானம் சென்னைக்குத் திருப்பி விடப்படுவதாக அறிவித்தார்" என்று வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்.
விமானம் தரையிறங்க முயற்சிக்கும் முன்பு சுமார் 2 மணி நேரம் விமான நிலையத்தைச் சுற்றி வந்ததாகவும், முதல் முயற்சி ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சில நொடிகளில், விமானி விரைந்து முடிவெடுத்து விமானத்தை மேலே இழுத்தது, அதில் இருந்த அனைவரின் உயிரையும் காப்பாற்றியது. 2-வது முயற்சியில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது என்றும் வேணுகோபால் விவரித்தார்.
"நாங்கள் திறமையாலும், அதிர்ஷ்டத்தாலும் காப்பாற்றப்பட்டோம். பயணிகளின் பாதுகாப்பு அதிர்ஷ்டத்தை மட்டும் சார்ந்து இருக்க முடியாது," என்று கேரளாவின் ஆலப்புழா எம்.பி. கூறினார். மேலும், பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் (DGCA), மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விமானம் சென்னையில் பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளதாகவும், தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவர்கள் விரைவில் தங்கள் இலக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் எம்.பி.க்கள் மற்றும் பயணிகள் அனைவரும் டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்.
Flightradar24.com தகவல்படி, விமானம் இரவு 8 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10.35 மணிக்குச் சென்னையில் தரையிறங்கியது. கடந்த சில வாரங்களாக ஏர் இந்தியாவின் சில விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.