Advertisment

அரசு வேலைக்கு திறந்தநிலைப் பல்கலை. பட்டங்கள் செல்லுமா, செல்லாதா? ஐகோர்ட் முக்கிய உத்தரவு

சட்டப்படி ஏற்படுத்தப்பட்டுள்ள திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை, அரசுப் பணிகளில் சேர ஏற்க மறுப்பதை, மத்திய, மாநில அரசுகள் மறுஆய்வு செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai high court order to take against Tiruvallur Collector Tamil News
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அரசுக் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணிக்கு சேர ஜெ.கோபிகிருஷ்ணா என்பவர் ஆசிரியர் தேர்வு  வாரியத்தின் (டி.ஆர்.பி) மூலம் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் தேர்வு  வாரியம் இவரின் விண்ணப்பத்தை நிராகரித்தது. திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டத்தை சுட்டிக் காட்டி விண்ணப்பத்தை நிராகரித்தாக கூறியது. அவர் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, அதன் பிறகு தனியார் திறந்தநிலைப் பல்கலை மூலம் 12-வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 

Advertisment

இதைத் தொடர்ந்து கோபிகிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி முன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்தார். அந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.  

அப்போது, மனுதாரர் தரப்பில், "ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ள தகுதியை மனுதாரர் பூர்த்தி செய்துள்ளார். உண்மையில், அவர் அதிக தகுதி பெற்றுள்ளார். இளங்கலை, முதுகலை, எம்.பில் மற்றும் தேசிய தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

மேலும் கல்லூரிக் கல்வி அமைப்பில் ஆசிரியர் பணி செய்ய தேவையான அதிகபட்ச கல்வித் தகுதியான Phd படிப்பையும் பெற்றுள்ளார் என்றார்.  மேலும், நிர்ணயித்த முறைப்படியே தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பதால், மனுதாரர் தகுதியை செல்லாது எனக் கூற முடியாது'' என்றார்.

தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் கூறப்பட்ட வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர். இருதரப்பு வாதங்களை கேட்ட பின் நீதிபதிகள் கூறுகையில், "மனுதாரரைப் பொறுத்தவரை, கல்வித் தகுதியை பெற்றுள்ளார் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. ஆனால், அந்த தகுதி அரசாணையில் குறிப்பிட்டுள்ள முறைப்படி பெறப்பட்டதா என்பது தான் கேள்வி. 

கடந்த 2009 ஆகஸ்ட்-ல் பிறப்பித்த அரசாணைப்படி, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு,  மூன்றாண்டு பட்டப்படிப்பு என்ற வரிசையில் தான்  கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். அதாவது, 10, 12-ம் வகுப்புகளுக்குப் பிறகே  பட்டப் படிப்பு பெற்றிருக்க வேண்டும். 

தமிழக அரசு பிறப்பித்த இந்த அரசாணை செல்லும் என, ஏற்கனவே உயர் நீதிமன்றமும் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின், என்ன காரணங்களாலோ, 12-ம் வகுப்பு படிக்கவில்லை. 

பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு, தேசிய தகுதி தேர்வு என, அனைத்து தகுதிகளையும் பெற்ற பின், 2019ல் தனித் தேர்வு வாயிலாக மனுதாரார் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். 12-ம் வகுப்பு படிப்புக்கு முக்கியத்துவம் இல்லை என்றால் மனுதாரர் அதை படித்திருக்க மாட்டார். 

ஆனால், பல ஆண்டுகளுக்கு பின், அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். அரசாணையை கவனத்தில் கொண்டுள்ளார். எனவே, 12 படிப்பு தகுதி பெறுவது கட்டாயம். 

அந்த தகுதியை, பட்டப்படிப்பில் சேர்வதற்கு முன் பெற்றிருக்க வேண்டும். உதவிப் பேராசிரியருக்கான தகுதியை பெற்றிருந்தும், 12 வகுப்பு படிப்பை கடைசியில் முடித்துள்ளார். இந்த நடைமுறையை, நீதிமன்றம் ஒருபோதும் ஏற்கவில்லை. 

பணி விதிகளின்படி அல்லது அறிவிப்பாணையின்படி, தகுதியை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இல்லையென்றால், வேலை பெற உரிமையில்லை. மனுதாரர் பெற்றுள்ள கல்வித் தகுதி, அரசு நிர்ணயித்த முறைப்படி இல்லாததால், வேலை பெறுவதற்கு அவை செல்லத்தக்கதாக கூற முடியாது. மனுதாரர் மீது இரக்கம் கொள்ளலாம்; அவருக்கு நிவாரணம் வழங்க, சட்டம் அனுமதிக்கவில்லை. 

நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் வாயிலாக, பல்கலைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.  திறந்தநிலை பல்கலைகளும், சட்டத்தின் வாயிலாக தான் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சட்டங்களின் வாயிலாக ஏற்படுத்தப்படும் பல்கலைகழகங்கள், இந்த கல்வித் தகுதிகளை வழங்கும்போது, அவற்றை அரசு பணிக்கு ஏற்காமல், அரசு துறைகள் மறுக்கின்றன. இத்தகைய படிப்பை படித்த மாணவர்களின் நிலை பரிதாபமானது. 

எனவே, சமூக நலன் கருதி, இந்த விஷயத்தில், மத்திய, மாநில அரசுகள் மறுஆய்வு செய்யலாம். அதுவரை, இருக்கிற சட்டத்தைத் தான் நீதிமன்றம் கணக்கில் கொள்ள முடியும்" எனக் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment