தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதில் அதிகமான மற்றும் குறைவான வாக்காளர்களின் எண்ணிக்கையைக் கொண்ட மாவட்டங்கள் தெரியவந்துள்ளன.
தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கவுள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3.14 கோடி பேரும், ஆண் வாக்காளர்கள் 3.09 கோடி பேரும் உள்ளனர். இவர்களில் மொத்தமாக 3.15 கோடி பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த அக்டோபர் 25-ம் தேதி தொடங்கி, நவம்பர் 7ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார். வாக்காளர் வரைவு பட்டியலின் முக்கியத்துவத்தை தெரியப்படுத்த, இந்திய தேர்தல் ஆணையம், முறையான வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பங்கேற்பு உள்ளிட்ட விழிப்புணர்வு பேரணியை நடத்தவுள்ளது.
மேலும், வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் தொடங்யுள்ளது. டிசம்பர் 8-ம் தேதி வரை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும். இதில், வாக்காளா் பட்டியலில் பெயா் மாற்றம், முகவரியில் திருத்தம், புதிய வாக்காளா் பெயா் சோ்ப்பு ஆகியவற்றுக்காக மனுக்களை அளிக்கலாம். இந்த ஆண்டில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலில் மாவட்ட வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி, சென்னை மாவட்டம் 38 லட்சத்து 92 ஆயிரத்து 457 வாக்காளர்களுடன் அதிக வாக்காளர் உள்ள மாவட்டமாக முதல் இடத்தில் உள்ளது.
அரியலூர் மாவட்டம், 5 லட்சத்து 6 ஆயிரத்து 71 வாக்காளர்களுடன் மிகவும் குறைவான வாக்காளர்கள் எண்ணிக்கை கொண்ட மாவட்டமாக கடைசி இடத்தில் உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.