சென்னை மெரினா கடலில் கலைஞரின் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அருகே கடலுக்கு மத்தியில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு இதைப்பற்றி பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இயல், இசை மற்றும் நாடகம் என்ற மூன்று வித தமிழ் இலக்கியங்களுக்கும் கலைஞர் கருணாநிதி தனது எழுத்தாற்றல் மூலமாக ஆற்றியுள்ள தொண்டின் நினைவாக பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நினைவுச்சின்னம் 3 பகுதிகளாக கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில், கருணாநிதி நினைவிடத்தில் இருந்து கடற்கரை வரை 220 மீட்டர் நீளம், 6 மீட்டர் உயரத்தில் காங்கிரீட் பாலம் கட்டப்படும் என்று திட்டமிட்டுள்ளது.
அடுத்து, காங்கிரீட் பாலம் முடியும் மணல் பரப்பில் இருந்து கடலுக்குள் சில மீட்டர் நீளத்தில் இரும்பு பாலம் அமைக்கப்படும்.
பேனா நினைவுச்சின்னம் 30 மீட்டர் உயரமும், 3 மீட்டர் விட்டமும் கொண்டதாக 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும். நினைவுச்சின்னத்தை அணுகும் பாலம் 9 மீட்டர் அகலமும், கடல் பரப்பு மற்றும் மணல் பரப்பில் இருந்து 6 மீட்டர் உயரமும் கொண்டதாக கட்டப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்காக கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், இடர் மதிப்பீடு, பேரிடர் மேலாண்மைத் திட்டம் ஆகிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.