திருச்சியை சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருப்பையில் நீர்க் கட்டி இருப்பதாகக் கூறி அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பெண்ணிற்கு தொடர்ந்து வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர், வேறு மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். இதில், அவரது கருப்பை அகற்றப்பட்டதும், வயிற்றில் மருத்துவத் துணி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தனது அனுமதியின்றி கருப்பையை அகற்றியதுடன், வயிற்றில் மருத்துவத் துணியை வைத்துத் தைத்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் அந்தப் பெண் மதுரையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த குறைதீர் ஆணையம் தவறான அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட திருச்சியை சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“