தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான்: மொத்த எண்ணிக்கை 45 ஆனது

சென்னை அசோக் நகரில் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் அமைச்சர், சுகாதாரச் செயலர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை, 781 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக டெல்லியில் 238 பேரும், மகாராஷ்டிராவில் 167 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 34 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ள நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு ஏழாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர், “தமிழகத்தில் சென்னையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

சென்னை அசோக் நகர், எல்.ஜி.ஜி.எஸ் காலனி 19வது தெருவில் உள்ள இரண்டு வீட்டில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் அனைவருமே முகக்கவசம் அணியவும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் வேண்டும் என அறிவுறுத்தினார்.

தற்போது, ஒமிக்ரான் பாதிப்புக்கு 45பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், 120 பேருக்கு எஸ் ஜீன் குறைபாடு கண்டறியப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வேகமாகப் பரவும் ஒமிக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

தொடர்ந்து, சென்னை அசோக் நகரில் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் அமைச்சர், சுகாதாரச் செயலர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Containment zones return to chennai as omicron cases rise to 45

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com