/indian-express-tamil/media/media_files/2025/10/11/adhavar-mineral-water-fine-2025-10-11-09-38-20.jpg)
அசுத்தமான குடிநீர்: கவனக்குறைவாக செயல்பட்ட ஆண்டவர் மினரல் வாட்டர் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த நீதிமன்றம்
காலாவதியாகாத குடிநீர் பாட்டிலுக்குள் அசுத்தம் இருந்த காரணத்தால், அந்தப் பாட்டிலை விற்பனை செய்த கடை உரிமையாளரும், பிரபலமான ஆண்டவர் மினரல் வாட்டர் நிறுவனமும் சேர்ந்து, நுகர்வோருக்கு ரூ.8,020 இழப்பீடும், வழக்குச் செலவும் வழங்க வேண்டும் என திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் பிரபலமான ஒரு மினரல் வாட்டர் நிறுவனத்தின் கவனக்குறைவு உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கு விவரம்
திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் இருந்து பால் பண்ணையை மையமாகக் கொண்டு பல்வேறு மாவட்டங்களுக்கு ஆண்டவர் மினரல் வாட்டர் நிறுவனம் குடிநீர் பாட்டில்களை விநியோகித்து வருகிறது. இந்நிலையில், திருச்சி மேலசிந்தாமணியைச் சேர்ந்த ரா. புவனேஸ்வரி என்பவர், கடந்த 20.02.2025 அன்று சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள எம். ராஜா என்பவரது கடையில் ரூ. 20 கொடுத்து ஆண்டவர் மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கியுள்ளார்.
குடிநீரைப் பருகுவதற்கு முன்பு பாட்டிலைப் பார்த்தபோது, அது காலாவதி ஆகாதபோதும், பாட்டிலுக்குள் தூசு மற்றும் அழுக்கு படிந்திருந்ததைக் கண்டுள்ளார். நிறுவனத்தின் கவனக்குறைவால் அசுத்தமான குடிநீர் பாட்டில் விற்பனை செய்யப்படுவது பொதுமக்களின் நலனுக்கு ஆபத்தானது என்று உணர்ந்த அவர், இது குறித்து கடைக்காரரிடம் முறையிட்டார்.
இதையடுத்து, நேர்மையற்ற வணிகம் மற்றும் சேவைக் குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிவாரணம் கோரி, புவனேஸ்வரி சார்பில் வழக்கறிஞர் சேகர் ஆஜராகி, திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் 8.5.2025 அன்று மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை, நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் தலைவர் டி. சேகர் மற்றும் உறுப்பினர் ஜெ.எஸ். செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின் முடிவில், கடைக்காரர், குடிநீர் பாட்டிலுக்கானத் தொகையான ரூ.20ஐ மனுதாரருக்கு வழங்க வேண்டும். மன உளைச்சலுக்கான இழப்பீடாக கடைக்காரரும் ஆண்டவர் மினரல்வாட்டர் நிறுவனமும் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ரூ.3,000 வழங்க வேண்டும். வழக்கு செலவுத்தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும். இந்த மொத்த தொகையையும் (ரூ.20, ரூ.3,000, ரூ.5,000) 45 நாட்களுக்குள் 9% வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.