சென்னை மதுரவாயல் அடுத்த ஆலம்பாக்கம் பாரதிதாசன் நகர் பகுதியில் மெட்ரோ குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் மக்கள் மெட்ரோ குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த குடிநீரை பயன்படுத்துவதால் உடல் அரிப்பு, தோல் நோய்கள், உபாதைகள் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த நான்கு வருடங்களாக இதுபோன்று குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
இதனால் தாங்கள் ஒரு குடம் பத்து ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவதாகவும், அப்படி பயன்படுத்தக்கூடிய தண்ணீர் வண்டியும் சில நேரங்களில் வருவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் தங்கள் பகுதியை சேர்ந்த மக்கள் அன்றாட வாழ்வுக்கே பெரும் அவதிப்படுவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர்.