புதுச்சேரி சட்டசபைக்கு மூன்று பேர் எம்.எல்.ஏ.வாக, நியமனம் செய்தது செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத, அம்மாநில சபாநாயகர் வைத்தியலிங்கம், சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு அம்மாநில பாஜக தலைவர் வி. சாமிநாதன், பாஜக பொருளாளர் கே.ஜி.சங்கர் மற்றும் பாஜக ஆதரவாளரான தொழில் அதிபர் எஸ். செல்வ கணபதியை நியமன எம்எல்ஏ-க்களாக நியமித்து, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம், மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.
இந்த நியமனம் சட்டப்படியானதாக இல்லை என தெரிவித்து பதவிப் பிரமாணம் செய்து வைக்க, பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்து விட்டார். இதனையடுத்து அந்த 3 பேருக்கும் ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் இந்த மூன்று பேரின் நியமனம் அரசியல் சாசன சட்டத்தின் படியும், புதுச்சேரி யூனியன் பிரதேச விதிகளின்படியும் தகுதி வாய்ந்த நபரால் மேற்கொள்ளப்படவில்லை என்பதால், அது செல்லாது என்றும், அவர்களை சட்டப் பேரவை கூட்டத்துக்கு அனுமதிக்க முடியாது என்றும் கடந்த ஆண்டு நவம்பரில் பேரவைத் தலைவர் அறிவித்ததாக பேரவைச் செயலாளர் உத்தரவிட்டார்.
சட்டப்பேரவை செயலாளரின் இந்த உத்தரவை எதிர்த்து நியமன எம்எல்ஏ-க்கள் மூன்று பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதேபோல, இம்மூவரின் நியமனங்கள் சட்டப்படி செல்லாது என அறிவிக்கக் கோரி, புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ-வும், கொறடாவுமான லட்சுமி நாராயணனும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், நியமன எம்எல்ஏ-க்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்யக் கோரி எஸ். தனலட்சுமி என்பவரும் உயர் நீதிமன்றத்தில் தனியாக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் விசாரித்து, கடந்த வாரம் தீர்ப்பு கூறியது. அதில், எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்ய துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றும், மூன்று நியமனம் செய்யப்பட்டது செல்லும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பை அடுத்து, பேரவைக்குள் செல்ல அனுமதி மறுத்ததன் மூலம், நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து விட்டதாக, புதுச்சேரி சபாநாயகர் வைத்தியலிங்கம், செயலாளர் வின்சென்ட் ராயருக்கு எதிராக புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ. வி.சாமிநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு வரும் திங்களன்று விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.