/tamil-ie/media/media_files/uploads/2023/01/Tasmac-Madurai-HC.jpg)
ஒருபுறம் மருத்துவமனைகள், மறுபுறம் டாஸ்மாக் கடைகள்: அரசின் முரண்பட்ட செயல்பாடு - உயர் நீதிமன்றம் கருத்து
திண்டுக்கல்லைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ''திருச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'திண்டுக்கல் மாநகராட்சியில் திருச்சி சாலையில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இந்த கடை உள்ள பகுதி பொதுமக்கள், மாணவ, மாணவிகள், பெண்கள் அதிகம் நடமாடும் பகுதியாகும். இந்தக் கடையில் மது வாங்கி குடித்துவிட்டு போதையில் உலவும் பலர், சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும்பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த டாஸ்மாக் கடையில் இருந்து 30 மீட்டர் மற்றும் 50 மீட்டர் தூரத்தில் 02 பள்ளிகள், கிறிஸ்தவ ஆலயம் ஆகியவையும், 100 மீட்டர் தூரத்தில் அரசு மருத்துவமனை உள்ளிட்டவை செயல்படுகின்றன. எனவே டாஸ்மாக் கடையால் நோயாளிகள், சாலையில் நடந்து செல்பவர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று வாதாடினார்.
இதனை தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குறிப்பிடுகையில், இந்த டாஸ்மாக் கடை மாநகராட்சி எல்லைக்குள் இருப்பதாலும், வணிகப்பகுதியில் செயல்படுவதாலும் அந்த கடைக்கு மனுதாரர் தெரிவிக்கும் தூரக்கட்டுப்பாட்டு விதிகள் பொருந்தாது என்று வாதிட்டார்.
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதும், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதும்தான் அரசின் முதன்மையான கடமை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மருத்துவ நோக்கங்களை தவிர போதைப்பொருள் மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகளை உட்கொள்வதை தடை செய்ய அரசு முயற்சிக்க வேண்டும் என அரசியலமைப்பின் 47-வது பிரிவு அறிவுறுத்துகிறது என்று தெளிவுபடுத்தினர்.
மக்கள் நல அரசு, பொது சுகாதாரத்தை பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை நிறுவுவதற்கு பதிலாக, மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த முழுமனதுடன் பாடுபட வேண்டும். மக்கள் நல அரசு, ஒருபுறம் அதிக மருத்துவமனைகளை நிறுவி, மறுபுறம் ஒரே நேரத்தில் டாஸ்மாக் கடைகளை நிறுவுவது முரண்பாடானது. எனவே டாஸ்மாக் கடையை நிறுவும்போது தூர விதிகளை மட்டும் கணக்கில் கொள்வதை ஏற்க முடியாது.
இந்த வழக்கை பொறுத்தவரை திண்டுக்கல் நகரிலிருந்து திருச்சி செல்லும் சாலையை பயன்படுத்துபவர்கள், மாணவ, மாணவிகள், கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இந்த டாஸ்மாக் கடை இடையூறாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு டாஸ்மாக் கடையை மூடுவது எந்த தீங்கையும் விளைவிக்காது. மாறாக பொதுமக்களுக்கு பெருமளவில் பயனளிக்கும். அந்த வகையில் இந்த டாஸ்மாக் கடையை 2 வாரத்துக்குள் மூட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.