குக்கர் சின்னம் மற்றும் அதிமுக அம்மா அணியின் பெயரை டிடிவி தினகரனுக்கு ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குக்கர் சின்னம் மற்றும் அதிமுக அம்மா அணியின் பெயரை ஒதுக்கக்கோரிய டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று(9.3.18) வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடைப்பெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போது சசிகலா தரப்பைச் சேர்ந்த டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் மற்றும் அதிமுக அம்மா அணி என்று பெயர் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த தொகுதியில் சுயேட்சையாக நின்ற டிடிவி, குக்கர் சின்னத்தை வைத்து வெற்றியும் பெற்றார்.
இந்நிலையில், டிடிவி தினகரன், குக்கர் சின்னத்தை தனது அணி தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது உள்ள அரசியல் சூழலில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால், வருகிற உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னம் மற்றும் அதிமுக அம்மா அணியின் பெயரையே தங்களின் அணி பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று டிடிவி மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையமே நடத்துவதால் சின்னம் குறித்து மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும். எனவே, டிடிவி தினகரன் கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் பதில் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தது.
தினகரன் தரப்பு, முதல்வர் தரப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தின் தரப்பு வாதங்கள் என அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று 10.30 மணியளவில் தீர்ப்பு வெளியாகியது. அதில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.