முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சமையல் மாஸ்டரை தேனாம்பேட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரசிகனான தனக்கு, அவரது படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுக்காததால் ஆத்திரத்தில் காவல்துறை அவசர தொலைபேசி எண்ணான 100க்கு போன் செய்து அவ்வாறு சொன்னதாக சமையல் மாஸ்டர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு இன்று வெடிகுண்டு வைக்கப் போவதாகவும், அது வெடித்துச் சிதறும் என்றும் மிரட்டல் விடுத்து விட்டு போனை துண்டித்து விட்டார். இதனால் பரபரப்படைந்த காவல்துறையினர், எங்கேயிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது என்பதை கண்டறியும் பணிகளை ஆரம்பித்தனர். அழைப்பு வந்தது ஒரு செல்போன் எண்ணைக் கண்டறிந்து, செல்போன் சிக்னல் உதவியுடன் அது யார் என்று தேடுதல் வேட்டை நடந்தது. விசாரணையில், அந்த செல்போன் எண், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவருடையது என தெரியவந்தது.
இதனையடுத்து தேனாம்பேட்டை போலீசார் பழனிவேலை கைது செய்தனர். 40 வயதான அவர் ஏன் இப்படி ஒரு மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பழனிவேல் மாம்பாக்கத்தில் ஒரு உணவகத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தினமும் குடிக்கும் பழக்கம் உள்ளவர். தான் திமுக அனுதாபி என்றும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒன்றில் பாட்டு பாட வேண்டும் என தீராத ஏக்கத்துடன் இருப்பதாகவும் தெரிந்தவர்களிடம் கூறி வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
மேலும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் அறிமுகம் ஆகுவதற்காக இப்படி ஒரு மிரட்டல் விடுத்தேன். இதன் மூலம் நான் ஃபேமஸ் ஆகலாம். உதயநிதி ஸ்டாலின் படத்தில் பாட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். என பழனிவேல் கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நினைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ள பழனிவேல் தற்போது சிறை கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil