கடந்த செப்டம்பர் 12-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு முன்பு, மாணவர்கள் இளைஞர்கள், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை, ஹேன்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை, போதைப் பொருட்களை பயன்படுத்தியதாகவும் ‘கூல் லிப்’ என்ற குட்கா பொருளை அதிகம் விற்பனை செய்ததாகவும் போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் விசாரணைக்கு வந்தது.
இதுபோன்ற வழக்குகள் தொடர்ச்சியாக வருவதால், தமிழகத்தில் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில், ஜாமீன் கோரி பல மனுக்கள் வருகின்றன. குறிப்பாக பள்ளி மாணவர்கள் இதில் அடிமையாகி வருகிறார்கள் என்பது தெரிகிறது என்று நீதிபதி பரத சக்ரவர்த்தி கூறினார்.
“தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோர் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. இதனை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என்று என அறிவித்து நாடு முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது.” என்று கேள்வி எழுப்பினார்.
‘கூல் லிப்’ஐ பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து இந்தியா முழுவதும் கட்டுப்படுத்துவதற்கு ஏதேனும் வாய்ப்புகள் இருக்கிறதா என்று மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் அரசுகளிடம் கேட்டு உரிய விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 20-ம் தேதி ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கில் நீதிபதி பரத சக்ரவர்த்தி, செப்டம்பர் 17-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஹரியானா மாநிலம், சோனேபேட் பகுதியைச் சேர்ந்த தேஜ்ராம் தரம்பால் பிரைவேட் லிமிடெட், கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியைச் சேர்ந்த விதரத் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், கர்நாடக மாநிலம் தும்குரு அந்தரசனஹள்ளி இண்டஸ்ட்ரியல் ஏரியாவை சேர்ந்த வி.ஆர்.ஜி ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை இந்த வழக்கில் ஒரு எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர் என்று கூறினார்.
மேலும், இந்த புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தள்ளி வைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று (செப்டம்பர் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், தமிழகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த 9 மாதங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 132 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதி பரத சக்ரவர்த்தி கூறுகையில், “கூல் லிப் போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள் 2 ஆண்டுகளில் அதற்கு அடிமையாகி, அதைவிட மோசமான போதைப் பொருட்களை தேடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால், இளம் தலைமுறையினர் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ஒருவர் பள்ளி கழிவறைகள் மற்றும் பள்ளி வளாகங்களில் போதைப் பொருள் ஏதேனும் கிடைக்கிறதா? என தொடர்ச்சியாக ஆய்வு நடத்த வேண்டும். பள்ளிகளை சுற்றியிருக்கும் கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஒரு மாநிலத்தில் பாதுகாப்பற்ற உணவுப் பொருளாக அறிவிக்கப்படும் கூல் லிப் உள்ளிட்ட போதைப் பொருட்கள் வேறொரு மாநிலத்தில் எப்படி பாதுகாப்பானதாகும் என தெரியவில்லை, புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் என தெரிந்தே தவறு செய்பவர்கள் அதற்கான பலன்களை அனுபவிக்கட்டும். ஆனால், குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமை.” என்று நீதிபதி பரத சக்ரவர்த்தி கூறினார்.
இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள் தரப்பில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, நீதிபதி, மத்திய, மாநில அரசுகள் மற்றும் கூல் லிப் உற்பத்தி நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“