குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண தொகை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தென்காசியில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்து திரும்பி தென்காசிக்கு குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் மலை பாதை வழியாக சென்ற பேருந்து மரபாலம் அருகே நிலை தடுமாறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பேருந்து விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 46 பேர் காயங்களுடன் குன்னூர், மேட்டுப்பாளையம், கோவை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் இருந்து உதகைக்கு 54 பேருடன் சுற்றுலா பேருந்து மூலம் சுற்றுலாவிற்கு வந்துள்ளனர். உதகையில் சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து விட்டு மீண்டும் தென்காசிக்கு செல்ல குன்னூர் வழியாக சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மரபாலம் பகுதியில் சுற்றுலா பேருந்து நிலைதடுமாறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் முப்புடாதி (67), முருகேசன் (65), இளங்கோ (64), தேவிகலா (42), கௌசல்யா (29), நிதின் (15), ஜெயா (50), தங்கம் (40) ஆகிய 8 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் குன்னூர் லாலி அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, கோவை அரசு மருத்து மனை, உதகை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியும், நிதியுதவியும் அறிவித்துள்ளார். அதன்படி உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தல 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் விபத்தில் நடந்த இடத்தில் நடைபெற்ற வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்து குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா, மாவட்ட வருவாய் அலுவலர் 'கீர்த்தி பிரியதர்ஷினி' உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“