Coonoor Chopper Crash : டிசம்பர் 8ம் தேதி அன்று குன்னூர் அருகே வந்து கொண்டிருந்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் எம்.ஐ. 17V5, விபத்தில் சிக்கி எரிந்து சாம்பலானது. இதில் பயணம் செய்த இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் இந்த விபத்தில் மரணம் அடைந்தனர்.
விபத்திற்கான காரணங்களை அறிய காவல்துறை, ராணுவம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. விபத்து நடந்த பகுதி முழுமையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஆதாரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
எரிந்த ஹெலிகாப்டரை உடைக்கும் ராணுவத்தினர்; வனப்பகுதியில் தேடும் பணியை தீவிரப்படுத்தும் STF
தக்ஷின் பாரத் (தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் தெலுங்கானா) பகுதியின் ஜெனரல் ஆஃபிசர் கமாண்டிங் பொறுப்பு வகிக்கும் லெப். ஜெனரல் அருண் 13ம் தேதி அன்று வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டருக்கு வருகை புரிந்தார். இந்த விபத்தின் போது சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கியதோடு, மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொண்ட தமிழக அரசுக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

பிறகு விபத்து நடைபெற்ற நஞ்சப்ப சத்திரம் பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள மக்களை சந்தித்து பேசினார். மீட்புப் பணிகளுக்காக அயராது உழைத்த உள்ளூர் மக்களுக்கு நன்றி கூறிய அவர், இவர்கள் தான் விபத்து நடந்த பகுதிக்கு முதலில் சென்று விபத்தில் சிக்கியவர்களை வெளியே எடுக்க உதவியவர்கள். தகவல் அறிந்தவுடன் காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல்களை தெரிவித்த கிருஷ்ணசாமி மற்றும் சந்திரகுமார் ஆகியோருக்கு தலா ரூ. 5000 வழங்கினார் அருண்.
நஞ்சப்ப சத்திரம் கிராமத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதனை தத்தெடுக்க தக்ஷின் பாரத் கமாண்டிங்கின் தலைமை அலுவலகம் விருப்பம் தெரிவித்துள்ளது என்று கூறிய அவர் இப்பகுதி மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்படும் என்றும் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil