சொந்தச் செலவில் தேடிச் சென்று தபால்களை தருவேன்: யார் இந்த சிவன்?

இந்த 10 வருடங்களில் எத்தனையோ மாறி இருந்தாலும் என்னை எதிர்பார்த்து காத்திருக்கும் நபர்களுக்கு தபால்களை தருவதில் தாமததே ஏற்படுத்தியதில்லை.

By: Ooty  Updated: July 25, 2020, 08:42:06 PM

Coonoor mail deliverer Sivan put his life on the line to deliver mails to those living in the forest : கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உதகை என்ற பெயரை கேட்டாலே , குன்னூர் சிவன் தான் ஞாபகத்திற்கு வருகிறார். அவரை போன்ற  அர்பணிப்பு கொண்டவர்களை இனி காண்பதும் சற்று சிரமம் தான். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேயிலை தோட்டங்கள், காடுகள், வனவிலங்குகளுக்கு மத்தியில் தன் உயிரை பணயம் வைத்து தபால்களை ஏழை எளிய மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் தபால்க்காரர் சிவன்.

ஏதோ செய்தித்தாள்களில் படிக்கும் போது ஏற்படும் பரவச நிலைப்போல் அத்தனை எளிமையானதாக இல்லை அவருடைய 15 கிமீ காட்டு வழிப்பயணம். 1985ம் ஆண்டு உதகை வெலிங்க்டனில் அமைந்திருக்கும் தபால் நிலையத்தில் தபால் தலை விற்பன்னராக  பொறுப்பேற்றுக் கொண்டார். குன்னூர் வண்ணாரப்பேட்டையில் பிறந்து வளர்ந்த அவர் தன்னுடைய பள்ளி படிப்பை நிறைவு செய்திருந்தார். 25 ஆண்டுகள் கழித்து 2010ம் ஆண்டில் வெலிங்டனில் இருந்து ஹில்குரோவிற்கு மாற்றம் செய்யப்பட்டார்.  அங்கு தபால்காரராக  தன்னுடைய பணியை தொடர்ந்தார். அவர் நினைத்ததை போன்று அந்த  பணி அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை.

ஆம்.  காலை 10 மணிக்கு குன்னூர் ஆர்.எஸ். (Coonoor Railway Station Post Office) தபால் நிலையத்திற்கு சென்று  தபால்களை எல்லாம் பெற்றுக் கொண்டு 10 கி.மீ அப்பால் இருக்கும் ஹில்குரோவ் தபால் நிலைய கிளைக்கு செல்வார். 11 மணிக்கு குன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ வரை உள்ளூர் பேருந்தில் பயணிக்கும் அவர் சரியாக 11.15 மணிக்கு சி.எம்.எஸ். பேருந்து நிறுத்தத்தில்  இறங்கிக்கொள்வார். அவர் அங்கிருந்து 7 கி.மீ தேயிலை தோட்டங்கள் வழியே நடந்து சென்று ஹில்குரோவ் தபால்நிலைய கிளைக்கு செல்வார். சி.எம்.எஸில் துவங்கி ஹில்குரோவ் தபால் நிலையத்தை அடையும் போது 12:30 ஆகிவிடும்.

காடுகள் நடுவே பயணம்

சிவனுக்கு தபால்கள் தர ஒதுக்கப்பட்ட பகுதிகள் கீழ் சிங்காரா, ஹில்குரோவ், வடுகன் தோட்டம், குறும்பாடி மற்றும் மரப்பாலம் ஆகும். ஒற்றையடி பாதையில், சைக்கிள் கூட செல்ல முடியாத இடத்தில், தன்னுடைய கால்களை மட்டுமே நம்பி ஒவ்வொரு நாளும் பயணத்தை  துவங்குவார் சிவன். மணி ஆர்டர், தபால்கள், பார்சல்கள், ரெஜிஸ்டர் போஸ்டர்கள் என அனைத்தையும் தலைமை தபால்காரர் பகுதி வாரியாக தந்த பின்பு 12:45 மணி அளவில் தன்னுடைய பணியை துவங்குவார் சிவன். 15 நிமிடம் நடந்து கீழ் சிங்காரா தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் நபர்களுக்கு ஏதாவது தபால்கள் வந்திருந்தால் அதனை கொடுத்துவிட்டு, அங்கிருந்து அடர்ந்த காடுகள் வழியே நடப்பார்.

இந்த காட்டுப்பாதை பிடிபட்டு அதில் தயக்கமின்றி நடக்க வெகுநாள் ஆனது என்று கூறும் சிவன் “யானையை மிகவும் அருகில் பார்த்த அன்று, எனக்கு இன்று தான் கடைசி நாள் என்றே முடிவு செய்துவிட்டேன். ஆனாலும் தட்டுத்தடுமாறி அங்கிருந்து மக்கள் நடமாட்டம்  மிகுந்த பகுதிக்கு வந்தேன்” என்று நினைவு கூறுகிறார்.

ஹில்குரோவ் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளி, ஹில்குரோவ் ரயில் நிலையம் என சில முக்கியமான இடங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எதிர்காலம் சிவனின் கைகளில் தான் இருந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் முதற்கொண்டு, ஹில்குரோவ் ஸ்டேசன் மாஸ்டர் வரை பலரும் இவர் வருகையை எண்ணி காத்திருப்பதுண்டு.  ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் இருந்து தண்டவாளம் மீதே 40 நிமிடங்கள் நடந்து செல்வார் சிவன். செல்கின்ற வழியில் சுரங்கங்களும், பாலங்களும், இருளும், காட்டு விலங்குகளும் தான் துணை. அதை தாண்டியவுடன் 30 முதல் 40 குடும்பங்கள் வசிக்கும் வடுகன்தோட்டம் என்ற மலை கிராமம் இருக்கிறது. காலையில் அவர் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு சாப்பிட்டால், மீண்டும் சாப்பாடு மாலை அவர் வீடு திரும்பிய பிறகு  தான். ஆனாலும் இந்த பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் சிவனுக்கு கட்டஞ்சாயா (Black Tea) கொடுத்து வரவேற்பது உண்டு. 1:40 மணிக்கு வடுகன் தோட்டத்தில் இருக்கும் நபர்களுக்கு தபால்கள் ஏதாவது வந்தால் கொடுத்துவிட்டு மீண்டும் தன்னுடைய நடை பயணத்தை துவங்குவார்.

”மணி ஆடர்களுக்காக காத்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி ஆறு மாதங்களாக, எனக்கு மணி ஆடர் வந்துருச்சா, வந்துருச்சான்னு கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் பணம் வரவில்லை. சரியாக ஆறு மாதங்கள் கழித்து மணி ஆடர் வர, நான் மகிழ்ச்சியுடன் எடுத்து சென்றேன். ஆனால் அதற்கு முதல் நாள் மாலையில் தான் உடல் நலக்குறைவால் அப்பெண் உயிரிழந்தார் என்ற செய்தி என்னை வெகுநாட்களாக பாதிப்பிற்கு ஆளாக்கியது” என்று நம்மிடம் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

வடுகன்தோட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம் பிரதான சாலையை தொட்டு செல்லும் பாதையில் 20 நிமிடங்கள் பயணத்திற்கு பிறகு மரப்பாலம்  பகுதியை சென்றடைவார் அவர். அங்கு 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மட்டுமே இருக்கிறது. அடிக்கடி நிகழும் நிலச்சரிவு மற்றும் வனவிலங்குகளுக்கும் – மனிதர்களுக்கும் இடையே இருக்கும் பிரச்சனைகள் காரணமாக 10 ஆண்டுகளில் இந்த பகுதியில் இருந்து நிறைய நபர்கள் நகரத்திற்கு நெருக்கமான பகுதிகளில் குடியேறினார்கள்.  அதனால் அங்கிருந்த பள்ளியும் மாற்றப்பட்டது. இந்த 10 ஆண்டுகளில் இங்கு நிகழ்ந்த சின்னஞ்சிறு மாற்றங்களையும் ஒரு பார்வையாளனாக நின்று பார்த்திருக்கிறார் சிவன். எங்கிருந்தாவது, இப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு கடிதங்கள் ஏதாவது வந்தால், அக்கம் பக்கம் இருப்பவர்களிடம், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டறிந்து, நேரிலே சென்று தபால்களை சேர்த்தும் இருக்கிறார் அவர்.

மரப்பாலத்தை தாண்டியும் நீள்கிறது பயணம். 2 மணிக்கு அடர்ந்த காடுகள் வழியே அவர் கே.என்.ஆர். நகருக்கு செல்வார். இரண்டு மூன்று கடைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் தவிர அங்கே வேறொன்றும் இல்லை. அங்கே இருக்கும் நபர்களுக்கு தபால்கள் வந்தால் அதனை கொடுத்துவிட்டு அங்கிருந்து 02:30 மணிக்கு குறும்பாடி என்ற குறும்பர் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு செல்வார். அங்கே இருக்கும் நபர்களுக்கு மணி ஆடர்களை கொடுத்துவிட்டு,  மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கி செல்லும் பேருந்தில் பயணிக்க துவங்குவார்.  குன்னூர் ஆர்.எஸ் தபால் நிலையத்தில்  (Coonoor Railway Station Post Office) காலையில் வைத்து சென்று சீருடையை மாற்றிவிட்டு தன்னுடைய வீட்டிற்கு செல்வார் சிவன்.

கடந்த 10 ஆண்டுகளாக இவரின் பணி இப்படித்தான் இருந்தது. ஆரம்பத்தில் வனவிலங்குகள், காலநிலை, நிலச்சரிவு, மழை, பனி என்று அச்சுறுத்தும் பல வகையான பிரச்சனைகளை எதிர் கொண்டாலும் கூட தன்னுடைய கடமையை சந்தோசமாக நிறைவேற்றியுள்ளார் சிவன். அவரின் குரல் அந்த திருப்தியை நமக்கு தருகிறது.

மேலும் படிக்க : இன்றும் பருத்தி தோட்ட வேலைக்கு குழந்தைகள் செல்கிறார்கள் – ஆசிரியர் மகாலட்சுமி

தனிப்பட்ட வாழ்க்கை

குன்னூர் வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் அவருக்கு பாலமுருகன் என்ற மகனும், கவிதா என்ற மகளும் இருக்கின்றார்கள். மகன் கோவையில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பணியாற்றுகிறார். ”கொரோனா பரவலும் ஊரடங்கும் இல்லையென்றால் தற்போது இமயமலையில் நான் இருந்திருப்பேன். அதற்காக தான் நான் பணம் சேமித்து வைத்திருந்தேன். பார்ப்போம் என்ன நடக்கிறது என” என்கிறார் சிவன். அவரின் சேவையை மதித்து கர்நாடக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் ரூ. 1 லட்சத்தை சிவனின் வங்கிக் கணக்கில் செலுத்தி வாழ்த்தியுள்ளார். ஒவ்வொரு நாளும் மாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தியானத்தில் ஈடுபட்டு வருகிறார் சிவன். யாருக்காகவும் அந்த நேரத்தை அவர் சமரசம் செய்து கொள்வதில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இத்தனை அர்ப்பணிப்புக்கு மத்தியிலும் அவருக்கு 2016ம் ஆண்டு கிடைத்த சம்பளம் ரூ. 12 ஆயிரம். மார்ச் மாதத்தில் அவர் ஓய்வு பெறும் போது அவர் பெற்ற சம்பளம் ரூ.16 ஆயிரத்து 500 தான்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Coonoor mail deliverer sivan put his life on the line to deliver mails to those living in the forest

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X