கூட்டுறவுத் துறை செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அண்மையில் தெரிவித்தது பேசு பொருளாகி உள்ளது. நிதியமைச்சரின் பேச்சுக்கு பதிலளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, முதலமைச்சர், மக்கள் திருப்தி அடைய வேண்டும். வேறு யாரையும் திருப்திபடுத்த வேண்டிய அவசியம் இல்லை எனப் பேசினார்.
இந்தநிலையில், கோவையில் 62-வது கூட்டுறவு வார விழா நேற்று (நவம்பர் 19) நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "கூட்டுறவுத்துறையின் அமைச்சராக ஐ. பெரியசாமி பொறுப்பேற்ற பிறகு துறையின் நிலையை மாற்றினார். முன்பு இருந்த கூட்டுறவுத் துறையை மாற்றி தலை நிமிர்ந்த துறையாக வலுப்படுத்தி உள்ளார். அனைவருக்குமான துறையாக மாற்றி உள்ளார். மேலும் கோவை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.1000 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில் வழங்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.
முன்னதாக, மதுரையில் கூட்டுறவு வார விழாவில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், "மக்களுக்கு சேவை செய்யும் துறையாக கூட்டுறவுத் துறையை மாற்ற வேண்டும். கூட்டுறவுத்துறையின் செயல்பாடு கொள்கை மற்றும் வரலாற்று ரீதியாக சிறப்பாக உள்ளது என்றாலும், தற்போதைய செயல்பாட்டு திறன் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். கூட்டுறவுத்துறையில் தினமும் ரெய்டுகள் நடத்தப்படுவது, ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பது என பல செய்திகள் வருகின்றன.
கூட்டுறவு சங்கங்கள் முழுமையாக கணினி மயமாக்கப்படாமல் இருப்பதால் பல பிழைகள், தவறுகள் நடைபெறுகின்றன. நடமாடும் ரேசன் கடைகளுக்கு பொருட்கள் செல்வதில்லை எனவும் புகார்கள் வருகின்றன. நிதி அமைச்சராக கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கான செயல்பாடுகள் எனக்கு திருப்திகரமாக இல்லை" என்று கூறியிருந்தார்.
ஒரு துறை அமைச்சர் குறித்து மற்றொரு துறை அமைச்சர் பொதுவெளியில் பேசியிருப்பது தி.மு.கவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil