சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் அனைத்து துறை செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப்.13) ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "அனைத்து துறையும் வளர்ச்சி என்ற இலக்குடன் நாம் செயல்பட்டு வருகிறோம். திட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அதனை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் அமைச்சர்களுக்கும், துறை செயலாளர்களுக்கும் தான் உள்ளது.
சில திட்டங்களை அறிவிக்கிறோம். ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் ஆகிறது. இத்தகைய காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும். சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்பதற்காக சிந்தித்து கொண்டே இருக்கக்கூடாது. நிதி நெருக்கடியும் இருக்கிறது. எந்ததிட்டங்களுக்கு அதிக முக்கியத்தவமும், முன்னுரிமையும் தர வேண்டுமோ அந்த திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நிதி ஒதுக்கீடுகளை விரைந்து வழங்கி அவற்றை செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.
முதல்வர் மற்றும் அமைச்சர்களால் அறிவிக்கப்படும் திட்டங்கள் அதிகமான கவனத்தை பெறும். அது இயற்கை தான். அப்படி கவனம் பெறும் திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்தி முடித்தாக வேண்டும். குறிப்பிட்ட சில துறைகளின் செயல்பாடுகள் பொது வெளியிலும், சமூக ஊடகங்களிலும் விமர்சனம் செய்யப்பட்டது. அவற்றில் துறை செயலாளர்கள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
சில துறைகளில் செயலாளர்களுக்கும், அவர்களுக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகளிடையே ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லை. இதனால், திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் தாமதமும், தொய்வும் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும். தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
"அமைச்சர்களுக்கும், துறை அதிகாரிகளுக்குமான ஒருங்கிணைந்த செயல்பாடு கூட சில துறைகளில் சில நேரங்களில் இல்லை. இது எங்கும், எப்போதும் எந்த துறையிலும் எந்தச்சூழலிலும் ஏற்படக்கூடாது. அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகம் ஆகிய நான்கும் ஒரே நேர்கோட்டில் செயல்பட்டால், நேர்கோட்டில் சென்றால், தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளும் நம்பர் ஒன் என்ற இலக்கை நிச்சயமாக அடையமுடியும்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு நான்காவது முறையாக நடைபெற்ற கூட்டம் இதுவாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil