/indian-express-tamil/media/media_files/2025/09/04/police-attack-2025-09-04-19-12-26.jpg)
முகப்பேரில் காவலரைத் தாக்கிய வழக்கறிஞர்: வீடியோ ஆதாரத்துடன் 2 பேர் கைது
சென்னை, நொளம்பூர் காவல் நிலையம் எதிரே உள்ள ஜெய் பாரத் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பா.ம.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடேஷ். இவர், அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். குடியிருப்பில் உள்ள மற்றவர்களுடன் ஏற்படும் பிரச்னைகளின்போது, வீடுகளுக்கு செல்லும் குடிநீர் விநியோகத்தை இவர் தடை செய்வதாகக் குற்றச்சாட்டுள்ளது. இதுதொடர்பாக வெங்கடேஷ் மீது ஏற்கெனவே நொளம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு அதே குடியிருப்பில் வசிக்கும் சரவணன் என்பவரின் வீட்டிற்கு வரும் தண்ணீரை வெங்கடேஷ் நிறுத்தியுள்ளார். இது குறித்துக் கேட்கச் சென்ற சரவணனை, வெங்கடேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்க முயன்றதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (100) சரவணன் புகாரளித்துள்ளார்.
காவலர் மீது தாக்குதல்:
புகார் தொடர்பாக, ரோந்துப் பணியில் இருந்த நொளம்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் பாலாஜி, பெண் காவலர் மஞ்சு ஆகியோர் விசாரணைக்காக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது, காவலர் பாலாஜி நிர்வாகிகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இடையில் வந்த வழக்கறிஞர் வெங்கடேஷ், காவலர் பாலாஜியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர், அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வெளியேறும்படியும் வற்புறுத்தியுள்ளார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த காவலர் பாலாஜி, அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது நடவடிக்கை:
காவலர் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் வெங்கடேஷ் மற்றும் அவருடன் இருந்த முன்னாள் கடலோர காவல் படை வீரர் சின்னப்பன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர். எழும்பூர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்காக அவர்கள் காத்திருந்தபோது, அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.