பல வாரங்களுக்குப் பிறகு, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளதால் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளது. சில தனியார் மருத்துவமனைகளிலும் கடந்த நான்கு நாட்களில் கொரோனா நோயாளிகளின் வருகை குறைந்துள்ளது. இதனால் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் சற்று ரிலாக்ஸ் ஆகியுள்ளனர்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 250 முதல் 260 ஆம்புலன்ஸ்கள் க்யூவில் நிற்கும் நிலை தற்போது இல்லை. தினமும் 114 ஆம்புலன்ஸ்களே மருத்துவமனைக்கு வருவதாக டீன் தேரனிராஜன் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 250-270 என்ற எண்ணிக்கையில் இருந்து, ஒரு நாளைக்கு 100 என்ற அளவில் குறைந்துள்ளது. அதேபோல் வெளிநோயாளிகள் எண்ணிக்கை 500-600(ஒரு நாளைக்கு) லிருந்து 250-300 ஆக குறைந்துள்ளது.
COVID-19 பணியில் ஈடுபடும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, குறைந்த எண்ணிக்கை கொண்ட வார்டுகளில் உள்ள நோயாளிகள் அதிக படுக்கைகள் ஆக்கிரமித்துள்ள வார்டுகளுக்கு மாற்றப்படுகிறார்கள். இதன் விளைவாக, டவர் -3 இல் உள்ள COVID-19 வசதியைத் தவிர மற்ற பகுதிகளில் திறக்கப்பட்ட கூடுதல் COVID-19 வார்டுகள் பல இப்போது காலியாக உள்ளன.
கூடுதலாக, ஆக்ஸிஜன் தேவையில்லாத நோயாளிகளும், 5 லிட்டருக்கும் குறைவான ஆக்ஸிஜன் தேவைப்படுபவர்களும் COVID-19 சிகிச்சை மையங்களுக்கு மாற்றப்படுவார்கள். கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், தடுப்பூசியை விரைவுபடுத்துவது, COVID-19 பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் தொடர்வது, தனியார் கூட்டங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்வது முக்கியம் என டாக்டர் தேரணிராஜன் கூறியுள்ளார்.
ஓமந்தூரார் மருத்துவமனையின் தீன் ஜெயந்தி கூறுகையில், வெளி நோயாளிகள் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்கு வரை குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 500 முதல் 600 நோயாளிகள் வந்துகொண்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 200ஆக குறைந்துள்ளது. அதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகள் எண்ணிக்கையும் பாதியாக குறைந்துள்ளது. 200 சேர்க்கையில் இருந்து தற்போது 80 முதல் 100 வரை மட்டுமே உள்ளது.
அரசு கொரோனா மருத்துவமனையின் இயக்குநர் கே.நாராயணசாமி கூறுகையில், ஆக்ஸிஜன் தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை மருத்துவமனையில் சீராக உள்ளது. இதுவும் படிப்படியாகக் குறையும் என்றார். கடந்த வாரத்தை ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. எனினும் இன்றளவிலும் நோயாளிகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மேலும் பல காரணங்களால் இளம் வயதிலேயே இறப்புகளும் ஏற்படுகிறது.
பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பதற்காக உள்கட்டமைப்பை அகற்றக்கூடாது அதனை தயார் நிலையில் வைத்திருப்பது முக்கியம் என டாக்டர் ஜெயந்தி கூறியுள்ளார். இந்த இரண்டு அலைகளிலும் கற்றுக்கொண்ட பாடங்களை மனதில் கொள்ள வேண்டும். மக்கள் தொடர்ந்து COVID-19 பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"