குடும்ப அட்டைதாரர்களுக்கான கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணை வழங்கும் திட்டத்தை நாளை ஜூன் 3ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் உள்ள 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாள் அன்று அறிவித்தார். இந்த திட்டம் திமுகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.
அதன்படி ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற போது கையெழுத்திட்ட 5 திட்டங்களில் இந்த கொரோனா நிவாரண நிதி திட்டமும் ஒன்று. அதில் முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படும் எனவும், மீதமுள்ள இரண்டாயிரம் இரண்டாவது தவணையாக ஜூன் மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி முதல் தவணை ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டது.
தற்போது, கொரோனா நிவாரண நிதியின் 2 வது தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை நாளை ஜூன் 3 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 10 பேருக்கு கொரோனா நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். முதல் தவணை கொரோனா நிவாரண நிதி பெற்றுக் கொள்ளாதவர்கள் இந்த முறை சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், நாளை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பல திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
அதில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தையும், கோயில்களில் வேலைபார்க்கும் பூசாரிகள், பட்டாச்சார்யர்கள், அர்ச்சகர்களுக்கு ரூபாய் 4,000 நிவாரணமும், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார்.
அடுத்ததாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி ரூ.10 லட்சம் ஆக உயர்த்தி வழங்கும் திட்டமும், திருநங்கைகள் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதி வழங்கும் திட்டமும், மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.