Advertisment

Corona Updates: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது; பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 18,985-லிருந்து 19,984 ஆக உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona Updates:  கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது; பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு

Covid-19 Cases Update: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,55,745ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,77,459 ஆகவும் அதிகரித்துள்ளது. அதோடு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,90,224-ஆகவும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 18,985-லிருந்து 19,984 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,260-லிருந்து 3,870 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 603-லிருந்து 640 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

Advertisment

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,804 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் அங்கு பலி எண்ணிக்கை 45,318 ஆக உயர்ந்துள்ளது. அதோடு புதிதாக 25,985 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,18,744 ஆகவும் அதிகரித்துள்ளது. சென்னையில் 55 பேர் உட்பட, தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தவறான முடிவுகளை காட்டியதால், ரேபிட் டெஸ்ட் கருவிகளை அடுத்த 2 நாட்களுக்குப் பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Coronavirus Latest Updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்



























Highlights

    22:39 (IST)22 Apr 2020

    கொரோனாவால் இறந்த டாக்டர் சைமனின் மனைவிக்கு போனில் ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்

    கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

    21:51 (IST)22 Apr 2020

    கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது; பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு

    மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தற்போதைய தொழில்நுட்பங்களை இந்தியா சிறப்பாக செயல்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

    21:02 (IST)22 Apr 2020

    அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப்.27-ல் மோடி ஆலோசனை

    அனைத்து மாநில முதல்வரகளுடன் ஏப்ரல் 27-ம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக் கூட்டத்தின்போது மாநிலங்களில் எடுக்கப்பட்டுவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிகிறார்.

    20:25 (IST)22 Apr 2020

    மருத்துவர்களைப் பாதுகாக்க அவசர சட்டம் கொண்டுவந்த மத்திய அரசுக்கு திருமாவளவன் நன்றி

    மருத்துவர்களைப் பாதுகாக்க அவசரச் சட்டம் கொண்டுவந்த மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி கூறினார். இந்த அவசரச் சட்டத்தில் தூய்மைப் பணியாளர்களையும் இணைத்துக்கொள்ல வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பு பணியின்போது மருத்துவர்கள் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் இழ்ப்பீடு என்ற முதல்வரின் அறிவிப்பை திருமாவளவன் வரவேற்றுள்ளார்.

    19:52 (IST)22 Apr 2020

    அத்தியாவசியப் பொருள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு மு.க.ஸ்டாலின் உதவி எண் அறிவிப்பு

    ஊரடங்கால் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உதவி எண் அறிவித்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “ கொரோனா ஊரடங்கால் தமிழகமே முடங்கியுள்ள நிலையில் உணவு,மருத்து போன்ற அத்தியாவசியங்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

    இந்த நெருக்கடியை சமாளிக்க ஒன்றிணைவோம் வா எனும் முன்னெடுப்பின் மூலமாக, நானும் தி.மு கழகமும் உதவிகள் தேவைப்படும் அனைவருக்கும் உறுதுணையாக இருப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

    19:24 (IST)22 Apr 2020

    கொரோனா அச்சுறுத்தல்: 2020-ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ரத்து

    கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக 2020-ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    19:22 (IST)22 Apr 2020

    ஊரடங்கு நீட்டிப்பா?

    ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஏப்ரல் 27ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    18:26 (IST)22 Apr 2020

    எண்ணிக்கை 20, 471 ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 20, 471 ஆக உயர்வு.

    * குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960 ஆக உயர்வு

    * கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 652

    * அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 251 பேர் உயிரிழப்பு

    18:25 (IST)22 Apr 2020

    33 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629ஆக உயர்வு - தமிழக சுகாதாரத் துறை தகவல்

    18:13 (IST)22 Apr 2020

    சமரசத்துக்கு இடமில்லை

    'மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை'

    - பிரதமர் மோடி ட்வீட்

    18:07 (IST)22 Apr 2020

    28 பேர் டிஸ்சார்ஜ்

    ஈரோடு பெருந்துறை மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 28 பேர் டிஸ்சார்ஜ்

    * கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள 28 பேரும் 14 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பில் இருக்க அறிவுரை

    17:37 (IST)22 Apr 2020

    பிரிந்து சென்ற மனைவி & குழந்தைகளைக் காண நடந்தே சென்ற கணவர்...! மீட்ட போலீசார்

    தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னை பிரிந்து சென்ற மனைவி & குழந்தைகளை காண, மனநலம் பாதிக்கப்பட்ட கணவர், நடந்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கமலாபுரத்தினை சேர்ந்த சண்முக ராஜ். இவருக்கு திருமணமாகி முப்படாதி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சண்முக ராஜ்-க்கு தீடீரென மன நிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்லவில்லை.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்து கொண்டு தென்காசியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி முப்படாதி தனது குழந்தைகளுடன் அங்கேயே வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சண்முகராஜ் இன்று அதிகாலை மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க, தென்காசிக்கு டிபன் பாக்சில் உணவு வைத்து கொண்டு, சட்டை அணியாமல் நடக்கத் தொடங்கியுள்ளார்.

    கோவில்பட்டி சாத்தூர் சாலையில் சட்டை இல்லமால் நடந்து சென்று கொண்டு இருந்த சண்முகராஜை, அப்பகுதி பொது மக்கள் விசாரிக்க முயன்ற போது, பயந்து போய் வேகமாக ஓடி கீழே விழுந்துள்ளார்.

    17:36 (IST)22 Apr 2020

    சாராயத்தை கடத்திய ஆயுதப்படை காவலர் கைது

    சேலம் மாவட்டம் கருமந்துறையில் இருந்து சாராயத்தை கடத்திய ஆயுதப்படை காவலர் கைது!

    ஆயுதப்படை காவலர் குமரேசன், நண்பர் கீதன் கைது - 20 லிட்டர் சாராயம் பறிமுதல்!

    16:53 (IST)22 Apr 2020

    மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்

    "அமெரிக்காவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசினால் தற்போதைய பாதிப்பை காட்டிலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்"

    அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை

    16:43 (IST)22 Apr 2020

    சென்னையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த காவல்துறைக்கு தமிழக உத்தரவு!

    சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 358 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மாநகர காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

    ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நேரத்தை பயன்படுத்தி தேவையின்றி வெளியே சுற்றித்திரிவோரை கட்டுப்படுத்த, சென்னை முழுவதும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கை மதிக்காமல் சுற்றித்திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ள காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக இருசக்கர வாகனத்தில் செல்ல ஒருவருக்கு மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதை மீறி ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயணித்தால் உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்யவும் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

    16:42 (IST)22 Apr 2020

    மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்

    "சுகாதாரத் துறை பணியாளர்கள், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்"

    * "கொரோனாவால் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுப்பவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

    * மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

    16:14 (IST)22 Apr 2020

    ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுப்போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைப்பதாக யு.எஸ்.ஏ ட்ராக் ஃபீல்ட் எனப்படும் அமெரிக்க தடகள விளையாட்டு நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

    16:13 (IST)22 Apr 2020

    ரூ.15,000 கோடி ஒதுக்கீடு

    கொரோனா நிவாரணப் பணிகளுக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    15:53 (IST)22 Apr 2020

    கோவிட் இந்தியா சேவை

    கொரோனா தொற்று தொடர்பான மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலான, 'கோவிட் இந்தியா சேவை' ட்விட்டர் இணையதளத்தை தொடங்கிவைத்தார் -மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.

    15:24 (IST)22 Apr 2020

    அவசர சட்டம்

    ‘மருத்துவர்களை காக்க அவசர சட்டம்’

    மருத்துவர்களை காக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை அனுமதி

    - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

    15:23 (IST)22 Apr 2020

    6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை

    "மருத்துவம் மற்றும் சுகாதார ஊழியர்களை தாக்கினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எச்சரிக்கை

    மருத்துவர்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.

    15:22 (IST)22 Apr 2020

    அரசு மக்களை எப்படிக் காக்கும்?

    மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படிக் காக்கும்? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

    * தமிழக சுகாதாரத்துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றிச் சரி செய்வது? - ஸ்டாலின்

    15:05 (IST)22 Apr 2020

    குடியேற்ற அனுமதி தற்காலிகமாக நிறுத்திவைப்பு - அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு

    கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்கா மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க குடிமக்களின் வேலை வாய்ப்புகளை பாதுகாக்க வேண்டும் என்பதால் குடியேற்ற அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளர். இந்த அறிவிப்பு 60 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும், பொருளாதார நிலைமையை பொறுத்து அடுத்த கட்ட முடிவுகள் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியிட்ட அறிவிப்பினால், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட இந்திய ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை கண்டன. பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவினால், இந்திய ஐடி நிறுவனங்களுக்கு சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    15:04 (IST)22 Apr 2020

    பரிசோதனையை கணிசமாக உயர்த்த நடவடிக்கை

    சென்னையில் செய்யப்படும் கொரோனா பரிசோதனையை கணிசமாக உயர்த்த நடவடிக்கை

    சென்னை மாநகர கூடுதல் மண்டல அலுவலர்களாக கார்த்திகேயன், பாஸ்கரன் நியமனம்

    - முதல்வர் பழனிசாமி

    14:43 (IST)22 Apr 2020

    ஏப்ரல் மாத பங்காக ரூ.1,928.56 கோடி...

    மத்திய வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு ஏப்ரல் மாத பங்காக ரூ.46,038 கோடி வழங்கப்பட்டுள்ளது

    தமிழகத்திற்கு ஏப்ரல் மாத பங்காக ரூ.1,928.56 கோடி வழங்கப்பட்டுள்ளது - மத்திய நிதியமைச்சகம்

    14:33 (IST)22 Apr 2020

    நடிகர் விஜய் 1.30 கோடி நிதி

    நடிகர் விஜய் 1.30 கோடியை நிதியாக கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கியுள்ளார். நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சமும், PM Cares-க்கு ரூ. 25 லட்சமும் , கேரளாவுக்கு 10 லட்சம், ஆந்திரா, புதுவை, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி உதவியாக வழங்கியுள்ளார்

    14:13 (IST)22 Apr 2020

    மருத்துவ பணியாளர் உயிரிழப்புக்கு 50 லட்சம் நிதியுதவி - எடப்பாடி பழனிச்சாமி

    கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்து துறையினரின் உடல் பாதுகாப்புடனும், உரிய மரியாதையுடனும் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதோடு கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு அரசு ஊழியர், தனியார் பணியாளர் உயிரிழந்தால் பணியை பாராட்டி விருது, சான்றிதழ் வழங்கப்படும் எனவும், மருத்துவம், காவல், உள்ளாட்சி, தூய்மைப்பணியாளர் உள்பட அனைத்து துறை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டல் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

    14:08 (IST)22 Apr 2020

    உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்

    கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழப்பவர்களின் உடல் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விருது வழங்கப்படும்- முதலமைச்சர்

    சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த கூடுதலாக 2 அதிகாரிகள் நியமனம்

    14:08 (IST)22 Apr 2020

    ரூ.50 லட்சம் நிதியுதவி​

    கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி​

    * ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.50 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு

    * முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    13:45 (IST)22 Apr 2020

    சீனாவில் உருவான நோயை தமிழர் மருத்துவத்தின் மூலம் விரட்டுவோம் - ராமதாஸ்

    "சீனாவில் உருவான நோயை தமிழர் மருத்துவமுறை மூலம் ஒழித்து உலகைக் காக்க வழி பிறக்கட்டும்!" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

    13:21 (IST)22 Apr 2020

    மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்

    சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டனர். மருத்துவமனை டீன் அழைத்து பேசிய நிலையில், இன்று மதியம் 3மணி முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட மருத்துவர்கள் முடிவு செய்திருந்த நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

    12:31 (IST)22 Apr 2020

    வெங்கையா நாயுடு பாராட்டு

    தமிழகத்தில் எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்வதாக அவர் தனது பாராட்டையும் தெரிவித்தார். 

    12:23 (IST)22 Apr 2020

    விமான போக்குவரத்து துறை அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று

    விமான போக்குவரத்து துறை அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 15ஆம் தேதி வரை அலுவலகத்திற்கு வந்து பணியாற்றியவர் அவர் என, விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஊழியருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டுள்ளது. 

    11:58 (IST)22 Apr 2020

    ரேஷன் பொருட்கள்: தமிழக அரசு அறிவிப்பு

    மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்களுக்கு ஏப்ரல் 24, 25ஆம் தேதிகளில் வீடு, வீடாக டோக்கன் வழங்கப்படும் என்றும், ரேஷன் பொருள் வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

    11:40 (IST)22 Apr 2020

    தொழில்நுட்ப மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு

    கொரோனாவுக்கு எதிராக செயலி, இணையதளங்களை உருவாக்க ஐடி தொழில்நுட்ப மாணவர்கள், அத்துறை பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். 

    10:58 (IST)22 Apr 2020

    மருத்துவர்களிடம் அமித்ஷா வேண்டுகோள்

    மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி மூலம் உரையாடினார். அப்போது மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும், மருத்துவர்கள் அடையாள போராட்டங்களை கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 

    10:35 (IST)22 Apr 2020

    ஜி.கே.வாசன் கருத்து

    ”சென்னை மாநகராட்சி முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளான ஏப்ரல் 26, மே 3-ல் முழு அடைப்பு அவசியம். மருத்துவமனை, மருந்துகங்களை தவிர பிற கடைகள் மூடப்பட வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த 2 நாட்களிலும் முழு ஊரடங்கு பற்றி மாநகராட்சி, தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

    10:25 (IST)22 Apr 2020

    கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி

    ”அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவனத்தோடு இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம், கண்டுபிடிப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும்பட்சத்தில், தடுப்பூசி மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்” என எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

    கொரோனாவால் இறந்த மருத்துவருக்கு அஞ்சலி இரங்கல் தெரிவிக்கும் வகையில், அரசு மருத்துவர்கள் இன்று முதல் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பணியின்போது இறந்த மருத்துவர்களுக்கு இன்று இரவு 9 மணிக்கு குடும்பத்துடன் மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
    Coronavirus Corona Corona Virus Lockdown
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment