தமிழகத்தில் 18 முதல் 45 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதோடு, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் வரும் மே 1 முதல் தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தாமாக முன் வரும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கட்டிட தொழிலாளர்கள், வெளி மாநில தொழிலாளர்கள், சில்லரை கடை வியாபாரிகள் என அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாவட்டந்தோறும் நோய் பரவலுக்கு ஏற்ப ஆக்ஸிஜன் வசதியுடன் தேவையான மருந்துகளை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய நான்கு மாநிலங்கள் அறிவித்திருந்தன. ஐந்தாவதாக தமிழகமும் இலவச தடுப்பூசி வழங்குவதாக தற்போது அறிவித்துள்ளது.
வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. மருந்து உற்பத்தியார்களிடமிருந்து மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேசமயம், கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீரம் நிறுவனம், மத்திய அரசுக்கு அதே 150 ரூபாய்க்கு தொடர்ந்து அளிக்கப்படும் என்று கூறியுள்ளது. அதே நேரம் மாநிலங்களுக்கு தடுப்பூசி ரூ.400 க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 க்கும் அளிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil