தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு கணிசமான அளவில் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் இதன் பாதிப்பு குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஜூலை 5ம் தேதி நிலவரப்படி, சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் இருக்கும் தெருக்களின் எண்ணிக்கை 8,402 ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் 7ம் தேதி, இது 513 ஆக சரிவடைந்துள்ளது. மொத்தமுள்ள 15 மாநகராட்சி ஜோன்களில், 23 தெருக்களில் மட்டுமே தற்போது கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.
சென்னையில் உள்ள 15 மாநகராட்சி ஜோன்களில், அம்பத்தூரில் அதிகபட்சமாக 67 தெருக்களில், 1,419 கொரோனா பாதிப்பு நபர்கள் உள்ளனர். இது சதவீதத்தின் அடிப்படையில் 21 சதவீதம் ஆகும். இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கத்தல் 63 தெருக்களில் 1,347 கொரோனா தொற்று நபர்கள் உள்ளனர். அண்ணாநகரில் 48 தெருக்களிலும், தண்டையார்பேட்டையில் 42 மற்றும் ராயபுரத்தில் 38 தெருக்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
சென்னையில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக உள்ள நிலையில், தண்டையார்பேட்டை, ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டையில் 10 சதவீதத்திற்கு குறைவாகவும், மணலி பகுதியில் 4 சதவீத பாதிப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 15 ஜோன்களில், 9 ஜோன்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லாத நிலை அடைந்துள்ளோம். திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை மற்றும் வளசரவாக்கம் ஜோன்களில், ஒரு கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. விரைவில் அவையும் நீக்கப்படும்.
மருத்துவ பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மேற்கொண்ட காய்ச்சல் முகாம்கள், வீட்டுக்கு வீடு சென்று சோதனைகளை மேற்கொண்டது உள்ளிட்ட நடவடிக்கைகளினாலேயே, சென்னையில் கொரோனா பாதிப்பு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளது. அம்பத்தூர், அண்ணாநகர், கோடம்பாக்கம், மற்றும் வளசரவாக்கம் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம்.
சென்னையில், கொரோனா பாதிப்பு இரட்டிப்பு நாள் 72.2 நாட்களாக உள்ளது. வடசென்னை பகுதியின் சிலபகுதிகளில் இந்த விகிதம் 150 நாட்களாக உள்ளது. இதேநிலையை, மத்திய மற்றும் தென்சென்னை பகுதிகளிலும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
சென்னையில் தற்போதைய அளவில் நாளொன்றுக்கு 12 ஆயிரம் ஆர்டிபிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 87 சதவீதமாக உள்ளது. பாசிட்டிவிட்டி விகிதம் 8 சதவீதமாக உள்ளது.
அம்பத்தூர் ஜோனில் குணமடைந்தவர்களின் விகிதம் 77 சதவீதமாக உள்ளது. மற்ற ஜோன்களில், 80 சதவீதத்திற்கு அதிகமாகவும், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டை ஜோன்களில் குணமடைந்தவர்களின் விகிதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
சென்னையில், இதுவரை 8 லட்சம் ஆர்டிபிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாசிட்டிவிட்டி விகிதத்தை இந்த மாதத்திற்குள் 6 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளோம்.
கட்டுப்பாட்டு பகுதிகளில் பிசிஆர் சோதனகள் அடுத்த 4 மாதங்களுக்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.