கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு கைதட்டி நன்றி தெரிவித்த நிலையில், சென்னையில் இறந்த மருத்துவரின் உடலை தகனம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்தவர், டாக்டர் சைமன் ஹெர்குலஸ், 55; நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். கீழ்ப்பாக்கத்தில் உள்ள, 'நியூ ஹோப்' மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர். கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த காரணத்தால், டாக்டர் சைமனுக்கும் தொற்று ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி, இறந்தார்.அவரது உடலை அடக்கம் செய்ய, சக டாக்டர்கள் மற்றும் உறவினர்கள், டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள, கல்லறை தோட்டத்திற்கு எடுத்து சென்றனர். அருகில் வசிக்கும் மக்கள், கொரோனாவால் இறந்தவர் உடலை, இங்கு அடக்கம் செய்தால், எங்களுக்கும் நோய் பாதிக்கும் எனக்கூறி, எதிர்ப்பு தெரிவித்தனர். டாக்டர் உடலை, ஆம்புலன்சில் ஏற்றி, நியூ ஆவடி சாலையில் உள்ள, வேலங்காடு மயான பூமிக்கு எடுத்துச் சென்றனர். தகவல் அறிந்து, அன்னை சத்யா நகர் பகுதி மக்கள், அங்கு கூடினர்; அவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அண்ணா நகர் போலீசார், பொது மக்களிடம் பேச்சு நடத்தினர். மாநகராட்சி ஊழியர்கள், உடலை அடக்கம் செய்வதற்கான, பணிகளை துவக்கினர். அப்போது, திடீரென ஒரு கும்பல், மாநகராட்சி ஊழியர்கள் மீதும், ஆம்புலன்ஸ் மீதும், கல் மற்றும் கட்டைகளை வீசி, தாக்குதல் நடத்தியது. ஆம்புலன்ஸ் வாகனத்தின், கண்ணாடிகள் உடைந்தன.
சென்னையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய , எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதோடு, ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள டாக்டர் ஒருவர், இது போன்று செய்ய வேண்டாம், அப்படி செய்வீர்கள் என கனவில் கூட நினைத்தது இல்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
கண்ணீர் வீடியோ
டாக்டர் பாக்கியராஜ், வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ``இவ்வளவு நாள் வீடியோவில் பேசுவதற்கு நான் சந்தோஷமடைந்துள்ளேன். ஆனால் இந்த வீடியோவைப் பதிவு செய்வதில் வேதனைப்படுகிறேன். என்னுடைய நண்பரான டாக்டர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 15 நாள்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அவரின் சடலத்தை அடக்கம் செய்ய முடிவு செய்தோம். சடலத்தை வாங்கியபின், சில பொதுமக்கள் அடக்கம் செய்ய விடவில்லை. அவருடைய ஆத்மா எப்படி சாந்தியடையும்? எதற்கு இந்த மருத்துவப் பணிக்கு வந்தோம் என்று வெட்கப்படுகிறோம். எங்களின் வேதனையை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. வேற எந்த மனிதருக்கும் இந்த நிலைமை ஏற்படக்கூடாது.
அடக்கம் செய்வதற்கான அனுமதியை அரசிடம் வாங்கியிருந்தோம். அரசு எல்லா உதவிகளையும் செய்திருந்தது. ஆனால், எங்கேயும் அவரை அடக்கம்செய்ய விடாமல் தடுத்துவிட்டார்கள். அதனால் கண்ணீருடன் இந்தத் தகவலை பதிவுசெய்கிறேன். அவர் ஒரு சிறந்த மருத்துவர். இந்த உலகில் சிறந்த மருத்துவர் என நிரூபித்தவர். ஆனால், அவரை அடக்கம் செய்யக்கூட மக்கள் அனுமதிக்கவில்லை. யாரால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது உங்களுக்கே தெரியும்.
மக்களுக்கு அவர் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அவருக்கு இந்த நிலைமை இல்லை. நேற்று அவரின் சடலத்தை அடக்கம் செய்யச் சென்றபோது, 50 அடியாட்கள் கல்லாலும் கட்டையாலும் அடித்துத் தாக்கினார்கள். இந்த மோதலில் காயமடைந்த சுகாதார ஆய்வாளர் உள்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனால் டாக்டரின் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதன்பிறகு, என்னுடைய சில டாக்டர் நண்பர்கள்தான் இறுதி அஞ்சலி செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நோயால் இறந்த டாக்டர்களுக்கு இதுதான்நிலைமையா... மக்கள் கொடுக்கிற பரிசு இதுவா, எப்படி மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இருக்கும். இந்த வீடியோவை வெளியிடுவதற்காக வெட்கப்படுகிறேன். இவ்வளவு பாதிக்கப்பட்டு, அவரை மருத்துவமனையில் காப்பாற்ற முடியாமல் கடைசியில் அடக்கம் செய்யக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். அவருடைய ஆத்மா எப்படி சாந்தியடையும்? எதற்கு இந்த மருத்துவப்பணிக்கு வந்தோம் என்று வெட்கப்படுகிறோம். எங்களின் வேதனையை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. வேற எந்த மனிதருக்கும் இந்த நிலைமை ஏற்படக்கூடாது. மக்கள் மனத்தில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். இன்றைய சூழலில் டாக்டர்களையும் சுகாதார பணியாளர்களையும் பல தரப்பினர் பாராட்டி வருகின்றனர். ஆனால், கொரோனா தொற்றால் இறந்த டாக்டரின் சடலத்தை அடக்கம் பண்ணக்கூட இடம் கிடைக்காமல் அலைந்தோம். கொரோனா தொற்றால் இறந்தவர்களை அடக்கம் செய்தால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை மக்களிடையே மீடியாக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.