கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் விமானப்போக்குவரத்து சேவை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால், விமானநிறுவனங்கள், மற்ற நிறுவனங்களைப்போல தங்கள் ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு செய்துள்ளது மட்டுமல்லாது, சம்பளம் இல்லாத விடுப்பு கொடுத்து அதிகளவிலான ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளது.
இதற்கு சென்னை விமானநிலையமும் தப்பவில்லை. விமான சேவை பெரிதும் முடங்கியுள்ளதால், விமான நிறுவனங்களில் அதுசார்ந்த துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 500 பேர் கடந்த மாதம் மட்டும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோன்று ஒரு நிறுவனத்திலிருந்து 200 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து அதிக விமானங்களை இயக்கும் இரண்டாவது பெரிய விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், நிலைமை சீராகும் வரை, சம்பளம் இன்றி வேலை செய்ய நிர்பந்தித்துள்ளது.
விமான சேவைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளால் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், 10 சதவீத பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது.
இதுதொடர்பாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவதுல ஆட்குறைப்பு நடவடிக்கையின் மூலம் ஊழியர்கள் அடையும் பாதிப்பை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. தற்போது நிறுவனத்தின் நிலைமை சரியில்லாத காரணத்தினால் தான் இந்த இக்கட்டான முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். நிலைமை சீரானதும், மீண்டும் பணியாளர்கள் திரும்ப அழைக்கப்படுவர் என்று தெரிவித்துக்கொள்ளவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து தற்போது நாள் ஒன்றுக்கு முதல் 10 முதல் 12 விமானங்கள் வரை மட்டுமே இயக்கப்படுவதாலேயே, இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தவிர்க்க முடியாததாகி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், விமான நிறுவனங்கள், ஊழியர்களின் எண்ணிக்கையை மெயின்டெய்ன் பண்ணுவதில் அதிக சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக 25 முதல் 30 விமான புறப்பாடுகள் என்ற நிலையே நீடித்து வருகிறது. இதன்காரணமாக, பல்வேறு விமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை சம்பளம் இல்லாத விடுப்பு அளித்துள்ளன. பைலட்டுகளுக்கு, வேலை இருந்தால் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும், சென்னை விமான நிலையத்தின் பல்வேறு துறைகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்களது வேலைகளை இழந்துள்ளனர்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது, தங்கள் நிறுவனம், ஊழியர்களை தேவை இருக்கும் இடங்களுக்கு மாற்றியமைத்து வருகிறது. நிலைமை சீராகி விமான சேவையில் சகஜநிலை திரும்பும்போது, மத்திய விமானத்துறையின் அறிவுறுத்தல்படி விமான சேவைகள் மாற்றியமைக்கப்படும். உள்நாட்டு விமான சேவைக்கு 50 முதல் 60 ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவன உயர் அதிகாரி கூறியதாவது, இந்தாண்டு இறுதிக்குள் விமான சேவை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான சேவைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். தற்போது விமான சேவைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாலேயே, விமான நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுட்டு வருவதாகவும், நிலைமை சீரானதும் ஊழியர்கள் திரும்ப பணியில் அமர்த்தப்படுவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil