சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க திட்டங்கள் - சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

Corona cases in chennai : இந்தியாவிலேயே சென்னையில்தான் 70 ஆயிரத்துக்கும் மேலான நபர்களைப் பரிசோதித்திருக்கிறோம். மொத்தமாக 1 விழுக்காடு மக்கள்தொகையை நாம் பரிசோதித்துவிட்டோம்

சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க பகுதிவாரியாக திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூறியதாவது, கொரோனா பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு, மக்களிடம் இருந்து ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறோம். ராயபுரம் பகுதியில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அங்கு பிரத்யேகமாக தனித்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் அருகாமைப் பகுதிகளில் உள்ள மக்கள் சந்தித்துக்கொள்வதால் கரோனா தொற்று அதிகம் ஏற்படுகிறது. அவர்களுக்குக் கண்கள் மற்றும் மூக்கு வழியாக நோய்த்தொற்று உண்டாகிறது.

முகக்கவசம் அணிவதை மக்கள் கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும். சென்னை குடிசைப் பகுதிகளில் 50 லட்சம் முகக்கவசங்கள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீட்டுக்குள் இருக்கும்போதும் வெளியில் செல்லும்போதும் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இதனைப் பழக்க மாற்றங்களில் மக்கள் கொண்டு வந்து எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். சென்னையைப் பொறுத்தவரை அச்சப்படாமல், ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை மக்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

சென்னையில் 80% பேருக்கு அறிகுறிகளே இல்லை. நோய் பாதிக்கப்பட்ட 70 சதவீதத்தினர் 20-60 வயதுக்குள்ளேயே உள்ளனர். சென்னையில் 65 வார்டுகளில் இதுவரை 10க்கும் குறைவாகவே நோயாளிகள் உள்ளனர் என்பது நல்ல விஷயம். 77 வார்டுகளில் 30க்கும் குறைவாகவே நோயாளிகள் உள்ளனர். குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்றும் நாளையும் சேர்ந்து 250 பேர் வீடு திரும்ப வாய்ப்புள்ளது.

இந்தியாவிலேயே சென்னையில்தான் 70 ஆயிரத்துக்கும் மேலான நபர்களைப் பரிசோதித்திருக்கிறோம். மொத்தமாக 1 விழுக்காடு மக்கள்தொகையை நாம் பரிசோதித்துவிட்டோம். வேறு எந்த இடங்களிலும் இவ்வளவு பரிசோதனை செய்யவில்லை. 21 மாவட்டங்களில் புதிதாக நோய்த்தாக்கம் இல்லை என்ற நிலையில், அங்கு ஒட்டுமொத்தமாக சோதனைகளைக் குறைத்ததை சென்னைக்கும் குறைத்ததாக, எண்ணம் வேண்டாம்.

முகக்கவசம் அணிந்தால் யாருக்கும் ஆபத்தில்லை. வாடகைக்கு முகக்கவசம் வாங்குவது, புதிதாக வாங்கும்போது கடைகளில் தொங்கவிட்டதை எடுப்பது ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் 50 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன. இவையெல்லாம் பலமுறை பயன்படுத்தப்படக்கூடியவை. இது ஏழை, எளிய மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன”. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close