சென்னையில் ஒரு வாரத்தில் கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஒரு தெருவில் 10 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அந்த தெருக்களையே சென்னை மாநகராட்சி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து வருகிறது. மே 24 ஆம் தேதி 765 ஆக இருந்த கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கை, மே 31ஆம் தேதி 365 ஆக குறைந்துள்ளது.
அதேபோல் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒன்று என்றளவில் இருந்த தெருக்களின் எண்ணிக்கை 6,200 லிருந்து 4,400 ஆக குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததற்கு ஊரடங்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மாநகராட்சி பணியாளர்களின் கொரோனா தடுப்பு நடவடிக்கையும் ஒரு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட சென்னை பகுதிக்குட்பட்ட 1 முதல் 5 மண்டலங்களில் 58%, மத்திய சென்னையில் உள்ள மண்டலத்துக்குட்பட்ட 6 முதல் 10 மண்டலங்களில் 56%, தென் சென்னையில் உள்ள 11 முதல் 15 வரையிலான மண்டலங்களில் 34% அளவுக்கும் நோய் தொற்று குறைந்து இருக்கிறது.
சென்னை முழுவதும் உள்ள 200 வார்டுகளில் ஒன்றில் கூட 20க்கு மேற்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை. தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட பீமன்பேட்டை பகுதியில் தான் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அங்குள்ள 123-வது வார்டில் 17 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. இதையடுத்து அந்த பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள 53 வார்டுகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. 73 வார்டுகளில் ஒரே ஒரு நோய் கட்டுப்பாட்டு பகுதி மட்டுமே உள்ளது. அதுவும் அடுத்த சில தினங்களில் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே 31 வெளியான தகவலின்படி, சென்னையில் ஒரு தெருவில் கூட 50க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை. மே 24ஆம் தேதி 8 தெருக்களில் 50 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2 தெருக்களில் 60க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு பதிவானது.
முகப்பேர் மேற்கில் உள்ள ஜஸ்வஸ்ந்த் நகர், அயனாவரத்தில் உள்ள கொன்னூர் நெடுஞ்சாலை, கே கேநகரில் உள்ள ஏபி பேட்ரோ சாலை போன்ற பகுதிகளில் 40க்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், கொரோனா தடுப்பு வழிமுறைகள் கடைபிடிப்பது தொடர்ந்தால்தான் முழுமையாக கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மக்கள் கூட்டம் சேருவது அதிகரிக்கும். அதனை தவிர்த்து அனைவரும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது தொடர வேண்டும். மார்க்கெட் போன்ற பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பதற்கு வண்டிகளை பயன்படுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"