கொரோனா பரவி வரும் நிலையில், ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Advertisment
இது தொடர்பாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்: 144 தடை உத்தரவு அமலாக உள்ளதால், பொதுநிவாரண நிதியாக, ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும். நடைபாதை வியாபாரிகளுக்கு, பொது நிவாரண நிதி ரூ.1000 உடன் கூடுதலாக ஆயிரம் ரூபாயும், கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட ஓட்டுநர் தொழில் செய்பவர்களுக்கு சிறப்பு தொகுப்பாக ரூ.1,000 வழங்கப்படும். கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.3,250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரேசன் கார்டு தாரர்களுக்கும் இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்கப்படும். மார்ச் மாதம் பொருட்கள் வாங்க முடியாதவர்கள் ஏப்ரல் மாதத்தில் பெற்று கொள்ள அனுமதிக்கப்படும். ரேசன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் தரப்படும். ஆதரவற்றோர் இருக்கும் இடத்திற்கு சென்று உணவு பொருட்கள் விநியோகிக்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் பொது சமையல் கூடங்கள் அமைக்கப்படும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கூடுதலாக 2 நாட்கள் ஊதியம் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள பிறமாநில அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 17 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் எண்ணெய் வழங்கப்படும். அம்மா உணவகத்தில் சுகாதாரமானமுறையில் உணவு பொருட்கள் சமைத்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil