கொரோனோ வைரஸ் பாதிப்பு பீதி காரணமாக, சென்னை விமான நிலையத்தில், சர்வதேச நாடுகளிலிருந்து பயணிகள் வரை 26 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக, சீனா. இத்தாலி உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு இந்தியா விசா மறுத்துள்ள நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச நாடுகளின் பயணிகளின் எண்ணிக்கை 22 முதல் 26 சதவீத அளவிற்கு சரிவடைந்துள்ளது.
இந்த பாதிப்பு இன்டர்நேசனல் டெர்மினல்களில் மட்டுமல்லாது, உள்நாட்டு பயணிகள் வருகையிலும் கடும் சரிவை ஏற்படுத்தியுள்ளதாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொற்று அதிகரித்து வருவதன் காரணத்தினால், உள்நாட்டு டெர்மினலிலும், பயணிகள் வருகை 3 முதல் 4 சதவீதம் வரை சரிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
குவைத் நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு இந்தியா தடை விதித்துள்ள நிலையில், கத்தார் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களின் சேவைகளும் பாதியாக குறைந்துள்ளன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ், கேதே பசிபிக் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், இந்தியாவிற்கு இயக்கும் விமானங்களின் எண்ணிக்கையை சரிபாதியாக குறைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா பீதியால், பெரும்பாலான மக்கள் விமான பயணத்தை புறக்கணித்து வருகின்றனர். இதன்காரணமாக குறைந்த அளவிலேயும், சில தருணங்களில் பயணிகளே இல்லாமல், பேய் விமானங்களாகவும் (Ghost flights) இயக்கி வருகிறோம். ஒரு விமானத்தில் 290 பயணிகள் பயணம் செய்யலாம், ஆனால், தற்போதைய நிலையில், 40 பயணிகளுடனே பயணம் செய்து வருகிறோம். இதன்காரணமாக, விமான சேவைகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் பீதியால், சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்திற்கு இந்த 2020ம் ஆண்டில் மட்டும் 113 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பை ஈடுகட்டும்விதமாக பல விமான நிறுவனங்கள் உள்நாட்டு சேவைகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதுடன் அதிரடி கட்டண குறைப்பு அஸ்திரத்தையும் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.