தமிழகத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 571ஆக உயர்வு - பீலா ராஜேஷ்
Beela Rajesh Press Meet : மகாராஷ்டிராவைவிட தமிழகத்தில் தான் அதிக ரத்த மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் தான் உள்ளன
Beela Rajesh Press Meet : மகாராஷ்டிராவைவிட தமிழகத்தில் தான் அதிக ரத்த மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் தான் உள்ளன
தமிழகத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Advertisment
இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறுகையில், "தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். இதனிடையே 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 90,824. 127 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 28 நாட்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 10,814. இதுவரை 4,612 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவைவிட தமிழகத்தில் தான் அதிக ரத்த மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் தான் உள்ளன. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பில் தமிழகம் இரண்டாவது நிலையில்தான் உள்ளது. நிலைமை தீவிரமான பிறகு சிகிச்சைக்கு வருபவர்களே உயிரிழக்கின்றனர்.
28 நாட்கள் கண்காணிப்பில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா உறுதியாகலாம். 2 முறைக்கு மேல் சோதனையில் இல்லை என்று முடிவு வந்தபிறகே வீட்டிற்கு அனுப்புவோம்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil