தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சென்னை சாலைகளில் தேவையின்றி பயணம் செய்பவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இந்த உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர் வழங்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காய்கறி, மருந்துக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் அடைக்கப்பட்டுள்ளன.
Advertisment
Advertisements
மக்கள் வீட்டினுள்ளேயே இருக்குமாறும், அத்தியாவசிய பொருட்களை வாங்க , வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வர வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சாலைகளுக்கு வருவோரிடம் அதற்கான காரணத்தை கேட்க வேண்டும். உண்மையான காரணத்தை சொன்னால் மட்டுமே அவர்களது பயணத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த காவல்துறை ஆணையர் ஏ கே விஸ்வநாதன் கூறியதாவது, தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொழுதுபோக்குக்காக செல்வது, பிக்னிக் வந்தது போல ஆங்காங்கே உலாவுவது போன்ற செயல்களை மக்கள் தவிர்க்க வேண்டும். சாலைகளில் தேவையில்லாமல் பயணம் மேற்கொள்பவரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இந்த ஊரடங்கு உத்தரவு நிலை தளர்த்தப்பட்ட பிறகுதான் அவை திருப்பியளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 6 ம் தேதி வரையிலான காலகட்டத்தில், சென்னை சாலைகளில் தேவையில்லாமல் பயணம் செய்ததாக 12 ஆயிரம் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறியது தொடர்பாக 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் விதம், அவர்களுக்கு தேவையான பொருட்களை, அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து 1 கி.மீ., தொலைவிற்குள்ளேயே கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் அதனை மீறி, நீண்ட தொலைவுகளில் உள்ள கடைகளுக்கு தேவையில்லாமல் சென்று வருகின்றனர். தற்போது வரையில் போலீசார் அவர்களை எச்சரித்து மட்டுமே வருவதாகவும், இந்த விதிமுறைகளை தொடர்ந்து மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil