கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுபோக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்த நாங்குநேரிக்கு 70 வயது இளைஞர், சைக்கிள்லயே வந்துள்ள சம்பவம் பலரை வியப்பிற்குள் ஆழ்த்தியுள்ளது.
சென்னையிலிருந்து ஜூன் 23ம் தேதி புறப்பட்ட பாண்டியன்,ஜூலை 1ம் தேதி தெய்வநாயகப்பேரியை அடைந்திருக்கிறார். அங்கு அவரை ஊர்மக்கள் பெரும்ஆச்சர்யத்துடன் வரவேற்றுள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த தெய்வநாயகப்பேரியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 73). இவர் கேரள மாநிலம் செஙகனச்சேரி பகுதியில் உள்ள ஓட்டலில் கேசியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சென்னையில் உள்ள மகனுடன் வசித்து வந்தார். கொரோனா கோரத்தாண்டவம் துவங்குவதற்கு முன்னதாகவே, பாண்டியன், சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு வந்து விட்டார்.
பரபரக்கும் நகர வாழ்க்கை, பாண்டியனுக்கு விரைவில் சலிப்பை அளிக்கவே, சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டார். ஆனால், அவருக்கோ இ-பாஸ் எப்படி பெறுவது என்ற விபரம் தெரியாததால், சைக்கிளிலேயே சொந்த ஊருக்கு புறப்பட்டார்.
தான் சைக்கிளிலேயே சொந்த ஊருக்கு வந்த அனுபவம் குறித்து பாண்டியன் கூறியதாவது, போன மாசம் 23-ம் தேதி, திண்டிவனத்துல இருந்து திருநெல்வேலிக்கு ஒரு பஸ் போகுதுன்னு சொன்னாங்க. உடனே பேரனோட சைக்கிளை எடுத்துட்டுத் திண்டிவனத்துக்கு 90 கிலோ மீட்டர் சைக்கிள்லயே போனேன்.
ஆனா அங்க போனா, பஸ்ஸுக்கு மேல கேரியர் இல்ல. சைக்கிளை ஏத்தமுடியாதுன்னு சொன்னாங்க. கூடவே விழுப்புரம் போனா சைக்கிளை ஏத்துறமாதிரி பஸ் கிடைக்கும்னு சொன்னாங்க. சைக்கிள்லயே விழுப்புரம் வந்தேன். அங்கயும் பஸ் கிடைக்கல. வயசான ஆளு ஒருத்தர் சைக்கிள்லயே வர்றதையும், பஸ்ஸுக்குத் தவிக்குறதையும் பார்த்துட்டு முகம் தெரியாத யாரோ ஒருத்தர் எனக்கு 50 ரூபாயும், தண்ணீர் பாட்டிலும் தந்தாரு. நெசமாவே என்கிட்டக் காசு இருக்குன்னு சொல்லியும் கேட்கல. அப்டியே சைக்கிள மிதிச்சு உளுந்தூர்பேட்டை வரை வந்தேன்.
அங்கே இருந்த டோல்கேட்ல ஒரு ஓட்டல் இருந்துச்சு. அது எங்க நாங்குனேரிக்காரர் ஜெயராமனுக்கு சொந்தமானது. அவர்கிட்ட என்னோட நிலமையைச் சொன்னேன். சாப்பிடச் சொன்னாரு. ஒரு காபி மட்டும் குடிக்கேன்னு குடிச்சேன். நான் கிளம்பும்போது ஆயிரம் ரூபாயைத் தந்துட்டாரு. அப்புறம் ஒரு காய்கறி வண்டியில் நானும், சைக்கிளுமா திருச்சி வரை வந்தோம்.
அங்கிருந்து கிளம்பி, வழியில விராலிமலையில் ஒரு டீக்கடையில் டீ குடிச்சு, பிஸ்கட் சாப்பிட்டேன். டீக்கடைக்காரர் காசு வாங்கல. கூடவே, அவர் கடைவாசலில் அன்னிக்கு ராத்திரி படுத்துருந்துட்டு காலையில் போகச்சொன்னார். பக்கத்துல இருந்த சாலையோரக் கடையில் நான் கேட்கதை எல்லாம் கொடுக்கவும் சொல்லிட்டுப் போனாரு. இந்தக் கரோனா நேரத்துலயும் இப்படி வழிநெடுக, உதவி கிடைச்சுட்டே இருந்துச்சு. மதுரை, விருதுநகர் பக்கம் வரும்போதெல்லாம் நல்ல மழை. சாத்தூர்ல நல்ல காத்து. கோவில்பட்டி பக்கமெல்லாம் காத்து ரெம்ப அடிச்சதால சைக்கிளை உருட்டிட்டுத்தான் வந்தேன். திருநெல்வேலி புதுபஸ் ஸ்டாண்டில் வந்து படுத்துட்டு, காலையில் எங்கூருக்குக் கிளம்பினேன்” என மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார்.
ஊர் எல்லையில் இருக்கும் சுடலைமாட சுவாமி கோயிலிலேயே 15 நாள்கள் தங்கி இருந்து தனது சுய தனிமைப்படுத்துதலையும் முடித்துக் கொண்டவர் தனது சொந்த வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.
ஆயிரம்தான் சொன்னாலும் இந்த உலகத்துல நல்ல மனசுக்காரங்களும் நிறையப் பேர் இருக்கத்தான் செய்யுறாங்க. அந்த மனசுகதான் கடைசிவரை என் கைக்காசைச் செலவழிக்கவே விடாம சொந்த ஊருக்கே கூட்டி வந்துருக்கு” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.