வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்க சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள் தயார்

கட்டணம் செலுத்தி ஓட்டல்களில் தங்குபவர்களின் வசதிக்காக அவர்களிடம் 50 சதவீத கட்டணங்களையே ஓட்டல்கள் வசூலிக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம்

வெளிநாடுகளில் இருந்து சென்னை வர உள்ளவர்களுக்கு கொரோனா கண்காணிப்பு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, நட்சத்திர ஓட்டல்களில், மருத்துவ வசதிகளுடன் கூடிய அறைகள் தயாராகி வருகின்றன.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியா திரும்ப முடியாமல் பெரும் அவதிக்குள்ளாயினர். இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இருந்து விமானம், ரயில், பஸ் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் தொடர்ந்து 3வது முறையாக ஊரடங்கு நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் வளைகுடா நாடுகளான ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தொழிலாளர்களாக அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அங்கு தவித்து வரும் நிலையில், அவர்கள் தமிழகம் திரும்புவதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் www.nonresidenttamil.org என்ற இணையதளம் துவங்கப்பட்டு அவர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள்.

மலேசியாவில் இருந்து புறப்பட உள்ள விமானத்தின் மூலம், இந்த வாரத்தில் 2 ஆயிரம் பேர் சென்னை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் மருத்துவ வசதியுடன் கூடிய அறைகளில் தங்கவைத்து கண்காணிக்கப்பட உள்ளனர்.
விமானம் சென்னையில் இறங்கியதும் விமான நிலையத்திலேயே அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படும். கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர். கொரோனா தொற்று இல்லாதவர்கள், வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுவர்.

வீடுகளில் தனி அறை வசதி இல்லாதவர்களுக்காக, தாம்பரம் சானடோரியம், விமானப்படை தள குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் 70 ஆயிரம் பேர் பயன்படுத்தும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தி தனிமைப்படுத்திக்கொள்ள விழைபவர்களின் வசதிக்காக, நட்சத்திர ஓட்டல்களில் மருத்துவ வசதிகளுடன் கூடிய அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மணப்பாக்கத்தில் உள்ள பெதர்ஸ் ராதா ஹோட்டல் பொதுமேலாளர் ருபம் தத்தா கூறியதாவது, இந்த ஓட்டலில் உணவகம் மூடப்பட்டுள்ள போதிலும் இங்கு தங்குபவர்களின் வசதிக்காக உணவுகள் தயாரிக்கப்பட்டு அவர்களின் அறைக்கு அனுப்பப்படும். அவர்களின் துணிகள் துவைக்க தனி வசதி செய்யப்பட்டுள்ளது. தங்கள் ஓட்டலின் பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை கையாண்டு பணியாற்றி வருகின்றனர். போன் மூலம் தொடர்பு கொண்டு மற்ற சேவைகளை அறைகளில் தங்கியுள்ளோர் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கட்டணம் செலுத்தி ஓட்டல்களில் தங்குபவர்களின் வசதிக்காக அவர்களிடம் 50 சதவீத கட்டணங்களையே ஓட்டல்கள் வசூலிக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்த சேவையை அதிகம் பேர் விரும்பும் பட்சத்தில் அதிகளவிலான ஓட்டல்களில் இந்த வசதி நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சையளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்களுக்கும் நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக, ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close