/tamil-ie/media/media_files/uploads/2020/06/template-2020-06-05T145902.469.jpg)
corona virus, lockdown, covid pandemic, kamalhaasan, naame theervu, video, chennai, corona infections, ngos, helps, vlounteers, welcome, kamal video, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil,
சென்னையை நாம் அனைவரும் இணைந்து மீட்போம். நாமே தீர்வு என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தி வரும் வேளையில் 'நாமே தீர்வு' என்ற தன்னார்வலர்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளார் கமல்ஹாசன்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கரோனா அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளது.
இன்று (ஜூன் 5) உலக சுற்றுச் சூழல் தினமாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் 'நாமே தீர்வு' என்ற தன்னார்வலர்கள் திட்டத்தை தொடங்கியுள்ளார் கமல்ஹாசன்.
இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இன்று உலக சுற்றுச் சூழல் தினம். உலகத்தைப் பசுமையாக மாற்றப் பல வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கும் நாம், இன்று நம் சென்னையையும் வேறு ஒரு பச்சைக்கு மாற்ற வேண்டியது இருக்கிறது.
கொரோனாவுக்கு எதிரான இன்று நடக்கும் போரில் என்ன செய்வார்கள் என்று காத்திருந்தும், ஏதாவது செய்வார்கள் என்று பார்த்திருந்தும் களைத்தவர்களின், நாமாவது ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனை தான் நாமே தீர்வு. இந்த நோயின் தீவிரத்தை மருத்துவர்கள் கட்டுப்படுத்தும் நேரத்தில், எளிய மக்கள் பசி நோயினால் பாதிக்கப்படக் கூடாது என தெருவோரம் இருப்பவருக்கு உணவளித்ததில் தொடங்கி, தேடி தேடி உதவி செய்தவர்கள் எல்லாம், நாமே தீர்வு என்று நம்பித்தான் லட்சக்கணக்கானோர் செய்தனர். செய்தும் வருகின்றனர். இல்லையென்றால் பசி, வறுமையின் பாதிப்பு கொரோனாவை மிஞ்சியிருக்கும். இப்பொழுது அதை ஒரு இயக்கமாக முன்னெடுக்கிறோம்.
என்னைப் போலப் பலரின் கனவுகளை நனவாக்கிய சென்னையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி இது. உங்களின் ஒத்துழைப்பும், மக்களின் பங்களிப்பும் இருந்து விட்டால் எந்த ஒரு விஷயத்திற்கும் தீர்வு எளிதாகும். இந்தச் சிக்கலான தருணத்திலும் நாமே தீர்வு என்ற இந்த சிந்தனையின் செயல் தொடக்கம் இன்று. இதற்கென தனியாக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய, தன்னார்வலர் மக்கள் படை ஒன்றை அமைக்கிறோம். ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் வெளியே வரத்தொடங்கியிருக்கும் நேரத்தில் அவர்களைப் பாதுகாக்காவிட்டால் இந்த தொற்றைத் தடுக்க முடியாது.
நோயை முறியடிக்க 60 நாட்கள் வீட்டிலிருந்தது வீண் போய்விடக்கூடாது. ஒருவரை ஒருவர் காப்போம் என்று நாம் தொடங்கினால் எவருமே விடுபட்டுப் போகப்போவதில்லை. மக்களுக்கு இந்த நேரத்தில் தேவைப்படக்கூடிய மருத்துவ. ஆலோசனைகளுக்கும், பாதுகாப்பு உபகரணங்களுக்கும், உணவுப்பொருள் தேவைகளுக்கும் மக்களே தீர்வாகும் இயக்கம் இது. மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் சானிடைசர் வைக்கப்படுகிறது. நெரிசல் மிகுந்த பகுதிகளில் இயங்கக்கூடிய மக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்படும். இந்த எல்லா உதவிகளையும் செய்ய பல தன்னார்வலர்களின் உதவியும், பங்களிப்பும் தேவை.
மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்கவும், அதற்கான தீர்வுகளைத் தேடும் தன்னார்வலராகப் பதிவு செய்யவும், 63698-11111 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். தன்னார்வலர்கள் எந்தப் பணி வேண்டுமானாலும் செய்யலாம். உதவிக்குப் பொருட்கள் வழங்குவது முதல், உதவிப்பொருட்களைக் கொண்டு சேர்ப்பது வரை, தன்னார்வலர்கள் செய்ய நிறைய பணிகள் இருக்கிறது. ஒரு கஷ்டமான சூழலிலிருந்து இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளும் சக மனிதனுக்கு தீர்வுகளை வழங்கிட, மக்களால் மக்களுக்காக முன்னெடுக்கப்படும் இயக்கம் இது. இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.