தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமலில் உள்ள ஊரடங்கை, இம்மாதம் இறுதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்ட்ட தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு 3 முறை நீட்டிக்கப்பட்டு வரும் 17ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த 12ம் தேதி ஆற்றிய உரையில், 4ம் கட்ட ஊரடங்கு உத்தரவு மாறுபட்டதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்ற எண்ணம் மக்களிடையே உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கை விலக்கிக்கொள்ளவதா அல்லது நீட்டிப்பதா என்றும், இதன் காரணமாக ஏற்படும் விளைவுகள், பாதிப்புகள் குறித்து மருத்துவத்துறை நிபுணர்கள், தொழில்துறை அமைப்பினர் உள்ளிட்டோருடன் முதல்வர் பழனிசாமி, முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
முன்னதாக மருத்துவத்துறையினர் உடன் ஆலோசனை நடத்தியிருந்தார். தற்போது வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஊரடங்கை முழுமையாக விலக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் படிப்படியாக ஊரடங்கை விலக்கிக்கொள்வதே சிறந்த வழி என்பதை முதல்வரிடம் வலியுறுத்தியதாக மருத்துவக்குழுவினர் ஊடகத்தினரிடம் தெரிவித்திருந்தனர்.
ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் பட்சத்தில், பொது போக்குவரத்து, உடற்பயிற்சி நிலையங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை செயல்பட விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து அமலில் இருக்கும். தொழிற்சாலைகள் இயங்க, மேலும் அதற்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். அரசு அலுவலகங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் 50 சதவீத பணியாளர்களுடன் வாரம் 6 நாட்கள் இயங்க வழிவகை மேற்கொள்ளப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைககளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. மே 31ம் தேதி வரை தமிழகத்திற்கு விமானம், ரயில் சேவைகளை இயக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா சோதனைகளை மேற்கொள்ள தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச்செயலாளர் கே சண்முகம் பிறப்பித்துள்ளார். டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு மருத்துவமனைகளில் கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சோதனை முடிவு நெகட்டிவ் என்று வருபவர்கள், 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின் அவர்களது வீட்டுக்கு அனுப்பப்படுவர் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமியுடன் 3 மணிநேரத்திற்கும் மேலாக மருத்துவக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். அதில் அதிக சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஊரடங்கை முழுமையாக விலக்கிக்கொள்ளக்கூடாது, படிப்படியாக தான் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முக கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவைகளே, தற்போது நம்மிடம் இருக்கும் ஒரே தடுப்பு நடைமுறைகள். கொரோனா தொற்றின் தாக்கம் பல்வேறு இடங்களில் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பல இடங்களில் நாம் இதனை கட்டுப்படுத்தியுள்ளோம். மக்கள் பாதுகாப்பாக இருந்தாலே போதும், பயப்பட தேவையில்லை என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.