புற்றுநோயாளியை காக்க ரயிலில் விரைந்து வந்த மருந்து - ரயில்வே நிர்வாகத்துக்கு குவியும் பாராட்டு
Southern Railway : ஏப்ரல் 23ம் தேதி, சென்னை எழும்பூரிலிருந்து ரயிலில் புறப்பட்ட மருந்து, மறுநாள் (24ம் தேதி), சம்பந்தப்பட்டவரிடம் ரயில்வே நிர்வாகம் ஒப்படைத்த நிகழ்வு, அனைவராலும் பாராட்டப்படுகிறது.
சிதம்பரத்தை சேர்ந்த புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தேவையான மருந்துகள், சென்னையிலிருந்து சரக்கு ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட நிகழ்விற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த வடிவேலு என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தனக்கு தேவையான மருந்துகளை பெறுவதற்கு வடிவேலு கடும் சிரமப்பட்டார். சிதம்பரம் பகுதியில் எங்குமே இவருக்கு தேவையான மருந்துகள் கிடைக்கப்பெறாததால், அதை சென்னையிலிருந்து அனுப்ப நண்பரின் உதவியை வடிவேலு நாடியிருந்தார்.
நண்பரும் அதற்கு இசைவு தெரிவிக்க, ஆனால், மருந்தை சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு எப்படி கொண்டுவருவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.
நண்பர், உடனடியாக தென்னக ரயில்வேயின் ஊரடங்கு நேரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய தேவைகள் சேவைக்கான தொடர்பு எண்ணை (90253 42449) தொடர்பு கொண்டார். இந்த கோரிக்கை, சென்னை மற்றும் திருச்சி டிவிசன் ரயில்வே அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருந்து வாங்கிய நண்பர், அதனை சென்னை எழும்பூர் ரயில் நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்தார். சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு நேரடியாக சரக்கு ரயில் சேவை தற்போது இல்லாத நிலையில், நாகர்கோவில் செல்லும் சிறப்பு சரக்கு ரயிலில் திருச்சிக்கு அனுப்பப்பட்டது.
திருச்சியில் இந்த மருந்தை பெற்றுக்கொண்ட லோகோ பைலட், அதை, சிதம்பரம் வழியாக செல்லும் ரயிலின் அதிகாரியிடம் ஒப்படைத்தார். பின்னர், அந்த மருந்து, வடிவேலுவிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.
ஏப்ரல் 23ம் தேதி, சென்னை எழும்பூரிலிருந்து ரயிலில் புறப்பட்ட மருந்து, மறுநாள் (24ம் தேதி), சம்பந்தப்பட்டவரிடம் ரயில்வே நிர்வாகம் ஒப்படைத்த நிகழ்வு, அனைவராலும் பாராட்டப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil