பேருந்து போக்குவரத்துக்கு என்னென்ன பாதுகாப்பு நெறிமுறைகள் : உயர்நீதிமன்றம் உத்தரவு
Chennai high court : பொதுப் போக்குவரத்து குறித்து அறிவிப்புகளை வெளியிட்டிருந்த போதிலும் ஊரடங்கிற்கு பிறகு, பேருந்து பயணம் தொடர்பாக என்னென்ன பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துள்ளது
கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு முடிந்த பின்பு, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளி பின்பற்றப்படுவது குறித்தும், உரிய நெறிமுறைகளை வெளியிட அரசுக்கு உத்தரவிடக் கோரி, ஆம் ஆத்மி கட்சியின் போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க தலைவர் ஆர்.எம். சுவாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
அந்த மனுவில், ஊரடங்கு முடியும் வரை, வாகனங்களுக்கான சாலை வரி, நுழைவு வரி, சுங்கக் கட்டணம் உள்ளிட்ட வரிகளையும், கட்டணங்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேருந்து பயணத்தில் கூட்டத்தை தடுக்கவும், பயணிகளிடையே சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும், பேருந்தில் ஓட்டுனர் – நடத்துனர்,பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே பொதுப் போக்குவரத்து குறித்து அறிவிப்புகளை வெளியிட்டிருந்த போதிலும் ஊரடங்கிற்கு பிறகு, பேருந்து பயணம் தொடர்பாக என்னென்ன பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துள்ளது என்பது குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய போக்குவரத்து துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil