தமிழகத்தில் கொரோனா பீதி பெரும்பாலான மக்களை வீட்டிற்குள் முடக்கியுள்ள போதிலும், குழந்தை திருமணங்கள் நடந்துள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பேரும், தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேரும் இந்த கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்த இக்கட்டான நிலையிலும், 2 குழந்தை திருமணங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை திருமணங்கள் தடுப்பு ஹெல்ப் லைன் எண் 1098 வந்த தகவலின்படி, திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பேட்டை, செங்கம் பகுதிகளில் 2 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக திருவண்ணாமலை போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக, மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். பலர் வெளியில் வராத நிலையில், காதும் காது வைத்ததுபோன்ற இதுமாதிரி சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய திருமணங்கள், ஊரடங்கிற்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டிருப்பதாகவும், ஆனால், தற்போது அசாத்திய சூழ்நிலை நிலவுவதால், இந்த திருமணங்கள் தற்போது நடைபெற்று வருவதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு திருமணம் நடைபெற இருந்ததாகவும், அந்த குழந்தையே, இந்த அமைப்பினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொலைதொடர்பு வசதி எல்லா வீடுகளிலும் இருப்பதில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் மீ்தான குற்றங்கள் குறைவு – போலீஸ்
இந்த ஊரடங்கு நேரத்தில் குழந்தைகள் மீ்தான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் மாநிலத்தில் குறைந்துள்ளது. தர்மபுரி, ஈரோடு , சென்னையின் நீலாங்கரை என சில பகுதிகளில் மட்டுமே இந்த வழக்குகள் பதிவாகியுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் தடுப்பு சிறப்பு படை அதிகாரியும் ஏடிஜிபியுமான எம் ரவி தெரிவித்துள்ளார்.
மக்கள் வீடுகளிலேயே இருப்பதாலும், அவர்தம் குழந்தைகள் வெளியிடங்களுக்கு செல்லாததாலும் இத்தகைய குற்றங்கள் குறைந்துள்ளது. இருந்தபோதிலும், தாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுப்பு
குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுத்தான் கொண்டிருக்கின்றன. ஊரடங்கு உத்தரவால், அவர்களால் வெளியில் வந்து தகவல் தெரிவிக்க முடியவில்லை. இதன்காரணமாகவே, போலீசிற்கு வரும் அழைப்புகள் குறைந்துள்ளனவே தவிர, குற்றங்கள் நடைபெறுவது குறையவில்லை என்று பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்பான நட்சத்திரா அமைப்பின் நிறுவனர் ஷெரின் போஸ்கோ தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil