கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவித்துக் கொள்ளக் கூடாது, தலைமைச் செயலாளர் உடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி இன்று (29.5.2020) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வினை தொடங்கி வைத்து பேசினார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகிறோம். நம்முடைய அரசு எடுத்த நடவடிக்கைகள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன் என்று முதல்வர் பழனிசாமி பட்டியலிட்டார்.
சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியாளர்களுடனான ஆலோசனைக்குப் பின்பு முதல்வர் பழனிசாமி சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் அதில் கோடைக் காலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டால் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமராமத்து பணிகளைச் சரியாகக் கவனிக்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .100 நாள் வேலைத்திட்டத்தில் முழுவதுமாக பணியாளர்கள் அமர்த்த வேண்டும். ஜூன் 12 குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையைத் திறக்க உள்ளது அதனால் அதற்கான கால்வாய்களை முறையாகத் தூர்வார வேண்டும் அந்தப்பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குக் கபசுர குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்கும் பொழுது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்பும் போது கை கால்களைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் இதற்கான பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது . வெளிமாநிலத்திலிருந்து வரக்கூடியவர்களுக்கு நோய்த் தொற்று அதிகமாக இருக்கிறது அவர்களுக்குப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவருக்கு நோய்த்தொற்று இருந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளித்து விட வேண்டும்.தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள கழிப்பறைகள் கிருமி நாசினிகளைக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இறுதியாக மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவித்துக் கொள்ளக் கூடாது, தலைமைச் செயலாளர் உடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.