தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் இந்த நிலையில் புயல் பாதிப்புகள் ஏற்பட்டால் அதைச் சமாளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, ஜூன் 5ம் தேதி துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
Advertisment
Advertisements
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”தமிழகத்தில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுள்ள இந்த சூழ்நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்வதோடு, புயலை எதிர்கொள்ள மிக சரியான நேரத்தில் தயார் நிலைக்கு வரவேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வசதியாக மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தில் திருத்தங்களை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். தனிநபர் பாதுகாப்பு சோதனை உபகரணம், முகக்கவசம் போன்றவை போதுமான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.
களத்தில் போராடும் பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் முன்னெச்சரிக்கையாக பணிகளை கவனிக்கும்படி அறிவுறுத்த வேண்டும். புயலுக்காக மக்களை வேறு இடங்களுக்கு மாற்றும்போது சமூக இடைவெளி பின்பற்றப்படுவதையும், முகக்கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.புயல் ஏற்பட்டால், தங்கும் இடங்கள், நிவாரண முகாம்களை அமைத்து அங்கு நெரிசல் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். தங்கும் இடங்கள், முகாம்களில் கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும். தனிமைப்படுத்தும் இடங்கள் புயலால் பாதிப்பு வராத வகையில் பாதுகாக்க வேண்டும்.
கொரோனா பாதிப்பு இருக்கும் சூழலில் புயல் பாதிப்பு வந்தால் இரண்டையும் சமாளிக்கும் வகையில் உட்கட்டமைப்புகள் மாற்றப்பட வேண்டும் போன்ற முக்கிய அறிவிப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil